தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் நடிகர் பிரசாந்த் பதிலளித்துள்ளார். 


நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் பிரசாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. விஜய், அஜித் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். 


ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது திரை வாழ்க்கை முடங்கி போனது. பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க போராடி வருகிறார். அதற்கு ஏற்றார்போல் பட வாய்ப்புகளும் அவருக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. 


இதனிடையே தெலுங்கு படம் ஒன்றில் ராம் சரணுக்கு அண்ணனாக பிரசாந்த் நடித்திருந்தார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வந்தனர். அப்போதுதான் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் அந்தகன் படம் குறித்த இன்ப அறிவிப்பு வெளியானது. 


அப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் 9ஆம் தேதி அந்தகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் என்பதால் அவரது ரசிகர்களு குஷியில் உள்ளனர். இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 


அந்த வகையில் நடிகர் பிரசாந்தும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தனியார் யூடியூப் சேனலுக்கு பிரசாந்த் பேட்டியளித்தார். அப்போது பைக் ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களை பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்தார். ஆனால் ஹெல்மெட் போடவில்லை. இதுகுறித்த வீடியோ வெளியாகவே போக்குவரத்து துறை பிரசாந்துக்கு ரூ.2000 அபராதம் விதித்தது. 


இதுகுறித்த புகைபடத்தையும் போக்குவரத்து காவல் துறை அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. 


இந்நிலையில் நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அபராதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “இதுகுறித்து கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். நான் பிரிபேர்டாக வந்துள்ளேன். ஏற்கெனவே பலமுறை நான் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து கூறியுள்ளேன். பேரணி கூட சென்றிருக்கிறேன். அது உங்களுக்கும் தெரியும். இதை இன்னொரு முறை விழுப்புணர்வு ஏற்படுத்தும் தருணமாக பார்க்கிறேன். கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்” எனத் தெரிவித்தார். 


மேலும் ரீல்ஸ் செய்வதற்காக உயிரை இழக்கும் நபர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாந்த் “ரீல்ஸ் மூலம் நீங்கள் நடிகராகலாம், நடிகையாகலாம், இயக்குநராகலாம். ஆனால் எல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு என்று ஒரு கடமை உள்ளது. அதனால் எதையும் பாதுகாப்பாக செய்யுங்கள். குடும்பம் இருக்கிறது. மறக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து விஜய் அரசியல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நல்ல விஷயம். அரசியலுக்கு வரட்டும் என பதிலலித்தார். விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லது யார் செய்தாலும் என் ஆதரவு இருக்கும் என தெரிவித்தார். 


விஜய் நல்லது செய்கிறாரா என்ற கேள்விக்கு அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள்தான் சொல்ல வேண்டும். நான் நல்லது செய்பவர்களுக்கு ஆதரவளிப்பேன் எனத் தெரிவித்தார். 


நடிகர் பிரசாந்த் வெட்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தில் நடிக்த்திருக்கிறார். பிரசாந்தின் அந்தகன் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளிலும் விஜய் ஈடுபட்டிருந்தார். இதனாலேயே பிரசாந்திடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.