இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரசன்னா தற்போது மீண்டும் அதே கெட்டப்பிற்கு திரும்பியுள்ளார்.
பிரசன்னா
போதிய திறமைகள் இருந்தாலும் சில நடிகர்களுக்கும் போதுமான வணிக ரிதீயிலான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அப்படியான ஒரு நடிகர் பிரசன்னா. ஆனால் நல்ல நடிகர்களை மக்கள் எப்போதும் அங்கீகரிக்கத் தவறியதில்லை . அப்படியான ஒரு நடிகர்தான் பிரசன்னா. மணிரத்னம் இயக்கத்தில் சுசி கனேசன் இயக்கத்தில் வெளியான ஃபை ஸ்டார் படத்தில் ஐந்து கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார் பிரசன்னா. இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகிய தீயே படத்தில் நடித்தார் பிரசன்னா. இந்தப் படத்தில் இடம்பெற்ற விழிகளின் அருகினில் வானம் என்கிற பாடல் பிரசன்னாவை அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு நடிகராக மாற்றியது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த சீனா தானா, சாது மிரண்டா உள்ளிட்டப் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வில்லனாக அவதாரம்
கதாநாயகனாக நடித்ததை விட பிரசன்னா வில்லனாக நடித்த கதாபாத்திரங்கள் அவரது நடிப்பு ஆற்றலை அதிகம் வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தன. 2008 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படம் வெளியானது. இதில் வில்லனாக மாற்றம் கண்டார் பிரசன்னா. முன்னரே சொன்னது போல் இமேஜ் வளையத்துக்குள் சிக்காத அவரை வில்லனாகவும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கொடூர வில்லனாக அதிகம் உணர்ச்சிவசப்படாமல் ஒவ்வொரு முறையும் சுயநலத்துடன் நடந்து கொள்ளும் பிரசன்னாவின் கேரக்டர் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், புலிவால், நேற்று இன்று என ஹீரோவாக தொடந்த அவர் நடிப்பில் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல தொடங்கினார். பாணா காத்தாடி படத்தில் ஹீரோ, வில்லன் கேரக்டரை தாண்டி கதையில் முக்கிய கதாபாத்திரம் என்றால் ரெடி என்பதை திரையுலகுக்கு உணர்த்தினார். பவர் பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், மாஃபியா சாப்டர் 1, நாங்க ரொம்ப பிஸி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் அசத்தினார். இடையில் திருட்டுப்பயலே 2 படத்தில் மாடர்ன் வில்லனாக மிரட்டினார். சமீபத்தில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் பிரசன்னா.
அஞ்சாதே 2
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தலைமுடி அதிகம் வைத்து அஞ்சாதே படம் லுக்கில் வீடியோவை பதிவிட்டுள்ளார் நடிகர் பிரசன்னா. ரசிகர்களால் அதிகம் பாராட்டப் பட்ட அவரது இந்த கதாபாத்திரத்தை மீண்டும் பார்த்ததும் அஞ்சாதே இரண்டாம் பாகத்திற்காக தான் இந்த லுக்கிற்கு அவர் திரும்பியுள்ளாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். அஞ்சாதே 2 படம் குறித்தான எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.