தமிழ் சினிமாவில் யாருடைய தயவுமின்றி தானாக முன்னேறி வந்த நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர். பைப் ஸ்டார் படம் மூலம், ஒரு ஸ்டாராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய பிரசன்னா, 2002 ம் ஆண்டில் இருந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அழகியத் தீவே, சீனா தானா 001, அஞ்சாதே, நாணயம் உள்ளிட்ட பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். 




இருந்தாலும், அவர் பேசப்படவில்லை என்பது , அவருக்கே வருத்தமான விசயம். அவர், பல்வேறு முயற்சிகளை சினிமாவுக்காக கையாண்டவர். ஆனால், பிரபலமான இடத்திற்கு அவரால் வர இயலவில்லை. அதே நேரத்தில், அவர் சோர்ந்து போகவும் இல்லை. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோ என்றில்லாமல், வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், அது தனது தேடுதலுக்கு தீனி போட்டால், யோசிக்காமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவராக பிரசன்னா களத்தில் உள்ளார். 


ஆனால், அவரால் பெரிய வெற்றியை காண முடியவில்லை. அல்லது வெற்றியாளராக அவரால் அறியப்பட முடியவில்லை. நல்ல முயற்சிகள் எடுத்து, அதற்கான பலன் இல்லாத போது, அதனால் சராசரி மனிதனுக்கு வரும் வழக்கமான விரக்தி தான் அது. தற்போது கமலின் விக்ரம் படம் வெற்றி பெற்று, அதை பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கமலே அதை கொண்டாடுகிறார். இத்தனைக்கும் அவர் பல வெற்றிகளை ருசித்த, ரசித்த மாபெரும் வெற்றியாளர்.




வெற்றி தான் எப்போதும் கொண்டாட வைக்கும்; அது ஒரு நாள் கிடைக்கும் வெற்றி அல்ல. தொடர் வெற்றியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், இடைவெளி வெற்றியாகவாவது இருக்க வேண்டும். இது கமலுக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிந்தைய வெற்றி. அதனால் தான் அவர் கொண்டாடுகிறார். இது போன்ற வெற்றியை பார்க்கும் போது, உண்மையில் சமரசம் இல்லாத நடிகருக்கு வருத்தம் வரத்தான் செய்யும். அப்படி தான் , பிரசன்னாவிற்கு தற்போது வருத்தம் ஏற்பட்டுள்ளது. சினேகாவின் கணவராக சில இடங்களில் அவரை அறிமுகப்படுத்துகின்றனர். அதுவே அவருக்கு வருத்தம் தரலாம். நாம் கூட அப்படி தான் குறிப்பிட்டுள்ளோம். அது புரிதலுக்காக. அப்படி இருக்க, பிரசன்னாவின் வருத்தத்தை அவர், ட்விட்டரில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார். 


‛‛ஜெயிக்கிற வரைக்கும்தான், ஜெயிக்கிறவன மட்டும்தான் உலகம் புகழும். தோற்றாலோ வெற்றிகிடைக்காதிருந்தாலோ உழைப்பையும் உழைப்பின் வியர்வையையும் முயற்சியையும் வேடிக்கை பார்ப்பவன் கூட கேலியே செய்வான். #இன்றையஉலகம் ’’






என்று அந்த பதிவில் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார். தன் உழைப்பை இந்த உலகம் அங்கீகரிக்கவில்லை என்கிற வருத்தத்தை, வெளிப்படையாக பதிவு செய்துள்ள பிரசன்னாவின் இந்த பதிவு, விக்ரம் படத்தின் வெற்றியையும் குறிக்கும் விதமாகவே இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என தெரிகிறது.