தமிழ் திரையுலகின்  உச்ச நட்சத்திர நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரசன்னா:


இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அவர் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளதாவது, “ அன்பு நண்பர்களே, நலம் விரும்பிகளே, இந்த முறை எனது அன்புக்குரிய தல  அஜித்குமார் சாரின் படத்தில் நான் இருப்பது இறுதியாக உண்மையாகியுள்ளது. என்னுடைய கனவு உண்மையாகியுள்ளது. மங்காத்தா படத்தில் இருந்து ஒவ்வொரு அஜித் சார் படம் வரும்போதும் நான் அந்த படத்தில் ஒரு பாகமாக இருக்கமாட்டேனா? என்று கருதியது உண்டு.






அவருடைய ரசிகர்கள் என்னை அவருடைய அடுத்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். ஆனால், கோப்பைக்கும் உதட்டிற்கும் இடையில் நழுவிவிடுவது போல சில சமயம் அமைந்தது. ஆனால், கடைசியாக இதைவிடச் சிறந்த தருணம் இருக்க முடியாது. நான் குட் பேட் அக்லி படத்தின் ஒரு பாகமாக உள்ளேன்.

கடவுளுக்கு நன்றி:


கடவுளுக்கு நன்றி. அஜித் சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவீஸ் மற்றும் அஜித் படத்தில் என்னை காண வேண்டும் என்று வாழ்த்திய ஒவ்வொருவருக்கும்  எனது நன்றிகள். நான் உற்சாகமாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறேன். என்னால் இப்போது அதிகம் கூற முடியாது. என்னுடைய முதல் சில காட்சிகளை முடித்துவிட்டேன். அவரைப் பற்றி உங்களுக்கும், எனக்கும் தெரிந்ததுதான் அவர். முழுவதும் பணிவானவர். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நடிகர் பிரசன்னா மிகவும் தீவிரமான அஜித் ரசிகர். இதை பல மேடைகளில் கூறியுள்ளார். தான் நடிக்க வரும் முன் கண்ணாடியில் அஜித் மாதிரி நடித்துப் பயிற்சி எடுத்துள்ளதாக கூறியுள்ளார். கதாநாயகன், வில்லன் என பல பரிமாணங்களில் நடிக்கும் திறன் கொண்ட பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித் வித்தியாசமான கேங்ஸ்டராக இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியின் தாமதம் காரணமாக இந்த படம் வெளியாக மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.