தன்னை விலைபேசும் அளவிற்கு பா.ஜ.க. சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.


மக்களவை தேர்தல் 2024


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


பிரகாஷ் ராஜ்


நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருபவர். துணிச்சலாக தனது அரசியல் கருத்துக்களை பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்திய காரணத்திற்காக பிரகாஷ் பாஜக ஆதரவாளர்களால் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப் பட்டும் வருகிறார். சமீபத்தில் நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என தெரிவித்திருந்ததை பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்திருந்தார்.


“420 செய்தவர்கள் தான் 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என பேசுவார்கள். இப்படி பேசுபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அது அவர்களின் ஆணவத்தை தான் பிரதிபலிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் நினைத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். ” என்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.


பாஜகவில் இணைகிறாரா பிரகாஷ் ராஜ்


 நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக வில் இணைய இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் வெளியாகின. இதற்கு  நடிகர் பிரகாஷ் ராஜ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். ”பாஜக என்னை விலை பேச முயன்றார்கள். ஆனால் என்னை விலை பேசும் அளவுக்கு அவர்களுக்கு பாஜக சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை “ என்று அவர் தெரிவித்துள்ளார்.