Prakash Raj: மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. 

 

பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து:

 

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், அரசியல் கருத்துகளை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறும் சில கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அந்த வகையில், ராமர் கோவில் குறித்து பிரகாஷ் ராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேர்க்காணல் ஒன்றில் பேசிய அவர், “ மசூதியை தோண்டினால் கோயில்கள் தெரியும் என்றால், கோயில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்” என பேசியுள்ளார். 





 

அயோத்தி ராமர் கோயில்:


 

இதற்கு முன்னதாகவும் ராமர் கோவில் குறித்து பேசிய அவர், “ நீ ராமர் பக்தனாக இரு எனக்கு பிரச்சனை இல்லை. இயேசு பக்தனாக இரு பிரச்சனை இல்லை. அல்லா பக்தனாக இரு. அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், குருட்டு பக்தனாக இருக்காதே. இவர்களால் தான் ஆபத்து” என பேசியுள்ளார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து வருவதால் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராமர் கோவில் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.





 

பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. அண்மையில் ராமர் கோவிலின் கட்டிடப்பணிகள் முடிந்த நிலையில், கோயில் திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்ட ராமர் கோவில் உலகளவில் பேசப்பட்டது. 20 அடி உயரத்தில் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கொண்டு ராமர் கோயில் அட்டப்பட்டது. 

 

பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க உலகில் தலைவர்கள் வருகை தந்தனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைத்துறை பிரலங்களும், நாட்டின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். ராமர் கோவில் கட்டப்பட்ட இடத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்து கோவில் கட்டப்பட்டதால் அதை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.