தமிழ் சினிமா தொடங்கி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி ஹீரோக்களுடன் வளைத்து வளைத்து சண்டை போடும் ஆல்டைம் ஃபேவரைட் வில்லன், சிறந்த குணச்சித்திர நடிகர், ரசிகர்களின் செல்லம் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களைக் காண்போம்.



  • நடிப்பின் மீதான தீராக்காதலுடன் மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள் வழியே தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

  • கர்நாடகாவைச் சேர்ந்தவர், கன்னட சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த பிரகாஷ் ராஜின் திறமையைக் கண்டு வியந்த நடிகை கீதா, தன் குருவும் இயக்குநர் சிகரமாகக் கொண்டாடப்படுபவருமான கே.பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

  • கே.பாலச்சந்தருக்கும் பிரகாஷ் ராஜை பிடித்துப் போக  ‘டூயட்’ தமிழ் படத்தில் நடிகர் பிரபுவுக்கு வில்லனாக அறிமுகமானார். 





  • கன்னட சினிமாக்களில் பிரகாஷ் ராய் எனும் தன் இயற்பெயரில் வலம் வந்தவரை தமிழில் பாலச்சந்தர்  ‘பிரகாஷ் ராஜ்’ எனப் பெயர் மாற்றி அறிமுகப்படுத்தினார்.

  • மணிரத்னத்தின் இருவர் படத்துக்காக தன் முதல் தேசிய விருதை வென்றார். தொடர்ந்து தயா, அந்தப்புரம், காஞ்சீவரம், புட்டக்கனா ஹைவே படங்களுக்காகவும் தேசிய விருதுகளைத் தட்டித் தூக்கி 5 முறை தேசிய விருது வென்ற நடிகராக உருவெடுத்தார். 

  • தன் குரு பாலச்சந்தரின் பிரபல சின்னத்திரை சீரியலான ’கையளவு மனசு’ தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். நடிகை கீதாவுடன் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்த இந்தத் தொடர் 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் சீரியலாக உருவெடுத்து, இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ் தொடங்கி பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும், விஜய், மகேஷ் பாபு உடனான பிரகாஷ் ராஜ் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

  • 2014ஆம் ஆண்டு பை லிங்குவல் படமான ‘தோனி’ மூலம் இயக்குநராக உருவெடுத்தார். அழகிய தீயே, மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் உள்ளிட்ட பல தரமான படங்களை தயாரித்துள்ளார்.

  • தெலங்கானா, கொண்டாரெட்டிப்பள்ளியில் உள்ள சில கிராமங்கள், கர்நாடகாவின் பண்ட்லாரஹட்டி கிராமத்தை தத்தெடுத்து உதவிகள் புரிந்து வருகிறார்.

  • தன் நண்பரும் பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை இவரை பெருமளவு பாதித்த நிலையில், அதன் எதிரொலியாக 2017ஆம் ஆண்டு அரசியலில் அடி எடுத்து வைத்தார்.





  • டிஸ்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதா குமாரி பிரகாஷ் ராஜின் முதல் மனைவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2004ஆம் ஆண்டு தங்கள் மகனை இழந்த இத்தம்பதி 2009இல் விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் போனி வர்மா என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும் லலித குமாரியுடன் நல்ல நட்புறவைப் பேணி வருகிறார்.

  • 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

  • சமூக வலைதளங்களில் படுஆக்டிவ்வாக இருந்து வரும் பிரகாஷ் ராஜ் தன் கொள்கை சார்ந்து தொடர்ந்து ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.

  • இறுதியாக நடிகர் தனுஷ், பாரதிராஜா இருவருடனும் இணைந்து ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் யதார்த்தமான அப்பாவாக நீண்ட நாள்களுக்குப் பின் தோன்றி தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.


வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், பன்முக ஆளுமை எனத் தொடர்ந்து சினிமாவில் சிறப்பாக இயங்க ‘செல்லம்’ பிரகாஷ் ராஜூக்கு வாழ்த்துகள்!