எனக்கு இரட்டைக் குழந்தை தான் வேண்டுமென நான் வேண்டினேன். சீரடி சாய் பாபா எனக்கு அதை நிறைவேற்றிக் கொடுத்தார். அதுவும், எனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் தான் வேண்டுமென வேண்டினேன் அப்படியே அதை இறைவன் நிறைவேற்றிக் கொடுத்தார் என்று நெகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார் நடிகர் ப்ரஜின்.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் ப்ரஜின். அவர் தனது பயணம் பற்றி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ப்ரஜின்.
சீரியலில் இருந்து நான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் நிறைய பேர் அப்படி வந்திருக்கிறார்கள். ஷாருக்கான் கூட சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான். தமிழ் சினிமாவில் அந்தச் சாதனையை செய்தவர் சிவகார்த்திகேயன். நான் சீரியலில் இருந்தபோது வருமானம் வந்தது. ஆனால் அதைவிட்டு 10 வருடங்களாக சினிமாவுக்கு மட்டுமே முயற்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எனக்கு நிறைய டைரக்டர்கள் தெரியும். ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் ஏன் உன்னை வளர்த்துவிட வேண்டும் என நினைப்பார்கள் அதுதான் சினிமா.
இந்த 10 வருடங்களில் நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். வீட்டு வாடகை கட்ட, லோன் கட்ட என எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டிருக்கேன். சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டிருக்கேன். எனக்காக எல்லாத்தையும் துறந்து வந்த சாண்ட்ரா. அவரை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.
உயிர் வாழணும் என்பதற்காக தான் சீரியல் செய்தேன். மலையாளத்தில் படம் பண்ணினேன். என் உடலை உயிரை வளர்த்தது சீரியல்தான். இன்று நான் அடுத்தடுத்து சினிமாக்களில் ஒப்பந்தமாகிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்தது கடின உழைப்பு மட்டும்தான். காலையில் சீரியல் செய்வேன். இரவில் சினிமாவில் நடிப்பேன். பயணத்தில் மட்டுமே தூங்கிய காலம் இருக்கும்.
என்னை நடிகனாக நிலைக்க வைத்ததில் காதலிக்க நேரமில்லை சீரியலுக்கு பெரும் பங்குண்டு. அந்த சீரியலில் வந்த டைட்டில் சாங் அவ்வளவு ஹிட். இப்ப வரைக்கும் நிறைய பேர் அதை ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர். அந்த சீரியலில் அப்போதே லிவிங் டூ கெதர் எல்லாம் காட்டிவிட்டார்கள். அதற்குப்புறம் இப்போ சமீபமாகத்தான் மணி சார் ஓகே கண்மனி எடுத்தார்.
விஜய் சேதுபதி சார் மாதிரி ஆகணும்:
எனக்கு விஜய் சேதுபதி சார் மாதிரி ஆகணும்னு ஆசை. அவர் இப்போ வெறும் ஹீரோ மெட்டீரியல் மட்டுமில்லை. அவர் வில்லன் செய்வார். நெகட்டிவ் கேரக்டர் செய்வார். எது வேண்டுமானாலும் செய்வார். ஒரு பான் இந்தியா ஸ்டஃப் ஆகிவிட்டார். ஒரு படத்தில் 2, 3 காட்சிகள் கூட வந்து சென்றாலும் அவர் பேசு பொருளாக இருப்பார். அப்படித்தான் நானும் இருக்க விரும்புகிறேன். அதற்காகத் தான் முயற்சிக்கிறேன்.
என் மனைவியால்தான் நடிகனானேன்:
நான் என் மனைவியில் தான் சினிமாவில் நடிகனானேன். அவர் எனக்கு எல்லாமாகவும் இருந்திருக்கிறார். ஒருவரிடம் எல்லாம் இருக்கும்போது யாரெல்லாம் கூட இருக்கிறார்கள் என்பதைவிட எதுவுமே இல்லாதபோது யார் கூட இருக்கிறார்கள் என்பதே முக்கியம். என் மனைவி அப்படியானவர் தான். எனக்காக எல்லாமுமாக இருக்கிறார்.
நாம் கடின உழைப்பாளியாக இருக்கும்போது ஸ்மார்ட்டாகவும் இருக்க வேண்டும். நமக்கான ஒரு படம் வாய்க்க வேண்டும். அந்த ஒரு படம் ஹிட்டடிக்கும் போது எல்லாமே சரியாக அமையும்.