நடிகர் ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனிதர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகர் பிரபு.


பிரபு ரஜினிகாந்த் கூட்டணியில் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் வகையறா.


இந்நிலையில், நடிகர் பிரபு ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்த் மிகச் சிறந்த நபர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வருவது தொடங்கி மற்றவர்களுடன் பழகுவது யாரை எப்படி அணுகுவது வரை நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அப்புறம் அவருடைய ஸ்டைல். அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது நாடே அறிந்தது. அவர் எங்கள் வீட்டில் எல்லா நல்லது கெட்டதிலும் முன் நின்றுள்ளார். தர்மத்தின் தலைவன் படத்தில் நான் அவரது சகோதரராக நடித்திருப்பேன். அதன்பின்னர் அவர் உண்மையிலேயே எனக்கு அண்ணணாகிவிட்டார்" என்று கூறியிருக்கிறார்.


அதேபோல் தனது அண்மையில் பிரபு, தனது தந்தை சிவாஜி கணேசனுக்கு எம்ஜிஆருடன் இருந்த நட்புறவு குறித்துப் பேசியிருந்தார்.


நடிகர் திலகம் சிவாஜி விருந்தோம்பலுக்கு பெயர் போனவர். அவர் சொல்லிக்கொடுத்த அதே அறத்தைத்தான் இன்றைக்கு அவரது குடும்பமும் பின்பற்றி வருகிறார்கள். இளைய திலகம் பிரபுவும் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் வீட்டில் இருந்து சாப்பாடு சமைத்து எடுத்து வர சொல்லிவிடுவார். குறிப்பாக அதில் சாப்பிடும் நபர்களுக்கு பிடித்த உணவும் இருக்கும் என்பதுதான் ஹைலைட். அதன் பின்னால் இருக்கும் சீக்ரெட்களையும் எம்.ஜி,ஆர், சிவாஜி உறவு குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் பிரபு. 


அதில் "விருந்தோம்பல் எல்லாம் எங்க அப்பா, சித்தப்பா கிட்ட கத்துக்கிட்டதுதான் . யாராவது வந்தா , அவங்க சாப்பிட்டாங்களா கேளுன்னு சொல்லுவாங்க . தண்ணி குடிச்சீங்களா ? சாப்பிட்டீங்களானு கேட்பதுதானே முதல்ல முக்கியமான விஷயம். மனிதனாக பிறந்தால் அது இயல்பாகவே இருக்கணும் இல்லையா. அம்மா மேல அப்பா ரொம்ப பிரியமாக இருப்பாங்க. அந்த வகையிலதான் அப்பா வீட்டுக்கு அன்னை இல்லம் அப்படின்னு பெயர் வச்சாங்க. அதேபோல அப்பா படிக்கல.. அதனாலதான் நாங்க எல்லோரும் நல்லா படிக்கணும்னு விரும்பினாங்க. அதனாலத்தான் வீட்டின் மேல கூட ஒரு சின்ன பையன் படிப்பது போல சிலை வச்சுருக்காங்க.  


அது கல்வியின் நோக்கத்தை உணர்த்துவதற்காகத்தான். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். அப்பா தலைமுறையில எல்லாருமே ஒன்னாத்தான் இருந்தோம் . இப்போதும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எங்களது குழந்தைகளும் இதையே தொடர்ந்து எடுத்துச்செல்வாங்கன்னு நான் நம்புறேன்.அப்பா மக்கள் திலகம் அவர்களின் பாடல்களை எல்லாம் விரும்பிக் கேட்பாங்க. அப்போ நானும் அப்பாவும் காரில் 5 மணிநேரம் பயணித்தோம். அப்போ ஆயிரம் நிலவே பாடலை அப்பா ஒரு 50 முறையாவது கேட்டிருப்பாங்க. எப்படிடா அண்ணனுக்கு (எம்.ஜி.ஆர்) மட்டும் நல்ல பாட்டா போடுறாங்க அப்படின்னு அப்பா கேட்டாரு. “ என சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் பிரபு.