மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபு, நடிகை அபிராமி நடித்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த “மிடில் கிளாஸ் மாதவன்” படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு. விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவர், அவரைப் போலவே குடும்ப கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி வந்தார். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு மிடில் கிளாஸ் மாதவன் படம் வெளியானது. இந்த படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு , விவேக், விசு, டெல்லி கணேஷ், ரேவதி சங்கரன், தாரணி, காக்கா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர். தீனா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


கதைச்சுருக்கம் 


வக்கீலாக வரும் பிரபு, தன் தங்கைகளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். எதிர்பாராதவிதமாக அவர் அபிராமியை திருமணம் செய்ய நேர்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் வாழும் வீடுகளில் திருமணமாகாத சகோதரிகள் இருக்கும்போது திருமணமான தம்பதிகள்  படும் கஷ்டங்களையும், குடும்பத்தினருக்காக பிரபு, அபிராமி இருவர் செய்யும் தியாகங்களையும் நகைச்சுவை, சென்டிமென்ட் என கலந்துக்கட்டி சொல்லியிருந்தார்  டி.பி.கஜேந்திரன். 


நகைச்சுவை சரவெடி 


இந்த படத்தில் வடிவேலும், விவேக்கும் போட்டிப் போட்டுக் கொண்டு காமெடி பட்டாசை கொளுத்தியிருப்பார்கள். குறிப்பாக காலையில் நேர்மையான ஆட்டோக்காரராகவும், மாலை 6 மணிக்கு மேல் குடிகாரராகவும் அவர் செய்யும் அட்ராசிட்டி தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. அதேபோல் மன்னர் பரம்பரையை சேர்ந்தவராக வரும் விவேக் செய்யும் அலப்பறைகளும் ரசிகர்களை கவர்ந்தது. 


வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளான வடிவேலு, விவேக் இருவரையும் விரட்ட பிரபு செய்யும் தில்லாலங்கடிகள், படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் செய்யும் காமெடிகள் என படம் முழுக்க இப்போது டிவியில் போட்டாலும் பார்க்கக்கூடியவர்கள் ஏராளமானோர். யூகிக்கக்கூடிய கதையை தன் காமெடி திரைக்கதை மேஜிக்கால் மாஸ் காட்டியிருப்பார் டி.பி.கஜேந்திரன்


ஸ்பாட்டில் அடித்து விட்ட வடிவேலு


இந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளின் டயலாக்குகள் ரசிகர்களுக்கு மனப்பாடமாக உள்ளது. அதில் அவரும் “மாலா எரியுதடி.. ஃபேனை 12 நம்பர்ல வை” என்பது இன்றைக்கு உக்கிரமாக அடிக்கும் அக்னி வெயிலுக்கு அனைவராலும் சொல்லப்படும் டெம்ப்ளேட் வசனமாகும். ஸ்கிரிப்டில் இல்லாத இந்த டயலாக்கை வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் தானாகவே சொல்லியதாக நடிகை தாரணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படி பல காமெடியான நினைவுகளை நமக்கு கொடுத்த டி.பி. கஜேந்திரன் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற படங்கள் ரசிகர்கள் நினைவில் என்றும் வாழும்...!