சந்திரமுகி 2 படத்தை ஓரளவுக்கு முடிந்த வரை நன்றாக எடுக்க முயற்சித்துள்ளார்கள் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

 

சந்திரமுகி 2:

 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 படம் கடந்த மாதம் 28ம் தேதி ரிலீசானது. படம் ரிலீசாவதற்கு முன்னதாக பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதை சந்திரமுகி 2 படம் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. முதல் பாகத்தை போன்று சந்திரமுகி 2 இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். 

 

2005ம் ஆண்டு ரிலீசான சந்திமுகி படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு என பலர் நடித்திருந்தனர். படத்தில் ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லிங், பாடல் என ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், அதே பாணியில் எடுக்கப்பட்ட சந்திரமுகி 2 படம் அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே திரைக்கு வந்த நான்கே வாரங்களில் சந்திரமுகி 2 படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. 

 

இந்த சூழலில் சந்திரமுகி2 படத்தை ஓரளவுக்கு நன்றாக எடுக்க முயற்சித்திருப்பதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரமுகி 2 படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் பிரபு, “படத்தை என் நண்பர் வாசு எடுத்துள்ளார். என்னை வைத்து 13 படங்களை இயக்கியுள்ளார். வாசு என்ன பண்ணாலும் நல்லா இருக்கும் என நினைப்பவன் நான். சந்திரமுகி 2 படத்தை முடிந்த அளவு நன்றாக எடுக்க முயற்சித்துள்ளார்” என கூறியுள்ளார். 

 

முன்னதாக, ”கோவை எனக்கு சம்பந்தி ஊரு. அந்த காலத்தில் இருந்தே எங்க அய்யா( சிவாஜி) கோவை பிரன்ஸ் அதிகம். கோவை அப்பாவுக்கு மிகவும் பிரியமான இடம் என்பதால் பொள்ளாச்சியில் சொந்தமாக நிலம் வைத்துள்ளோம். என் மகன் விக்ரம் பிரபுவுக்கு குமாரப்பாளையத்தில் பெண் எடுத்துள்ளோம். இந்த ஏரியாவில் இருப்பவர்கள் எல்லாரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். இங்கு வந்தாலே கேரியரில் எனக்கு சாப்பாடு வந்துவிடும். அந்த அளவுக்கு கோவை மக்கள் அன்பு, பாசம் கொண்டவர்கள்” என்றார். 

 

மேலும், LCU போல் பழைய படங்களின் கதைகளை புது முறையில் எடுத்தால் கண்டிப்பாக பண்ணுவோம். பழைய படங்களை புது முறையில் கொடுக்கின்றனர். அந்த வகையில் குரு சிஷ்யன் பார்ட் 2 எடுத்தால் அதில் என் மகன் விக்ரம் பிரபு நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்றார். 

 

பி.வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி படத்தை பிரபு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.