நடிகர் பிரபாஸ் நடித்துள்ள “கல்கி 2898 ஏடி” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில்  பிரபாஸூடன், அமிதாப்பச்சன்,கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். 






கல்கி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்திய சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது. இப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 10 ஆம் தேதி கல்கி 2898 ஏடி படத்தின்  ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


பான் இந்தியா படமாக உருவாகும் கல்கி படத்தில் பிரபாஸ் மற்றும் அமிதாப்பச்சனின் கேரக்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே பாகுபலி படத்துக்குப் பின் தொடர் தோல்விகளால் சிக்கி திணறி வரும் பிரபாஸூக்கு இந்த படமாவது கைகொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி 2898 ஏடி படம் முதலில் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற்றதால் ஜூன் மாதத்திற்கு ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. 


மகாபாரத கதையையும், விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியையும் கலந்து கற்பனை கதையுடன் காட்சிகளாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் கார் ஒன்றும் நடித்துள்ளது. இந்த காரானது பல்வேறு நகரங்களில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தது. இந்த காரை சென்னையில் இயங்கி வரும் மஹிந்திரா குழுமத்தின் ஆய்வு மையமும் கோவையில் இயங்கி வரும் ஜெயெம் ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்தது குறிப்பிடத்தக்கது.