தமிழ் சினிமாவில் 1980களில் தொடங்கி தற்போது வரை வில்லனாகவும். சண்டைப்பயிற்சி கலைஞருமாக இருந்து வருபவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரகுவரனுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோருடன் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் நடிகர் பொன்னம்பலம். நாட்டாமை, முத்து, பெரிய குடும்பம், அருணாச்சலம், சிம்மராசி, திருநெல்வேலி போன்ற பல்வேறு படங்களில் பொன்னம்பலம் வில்லனாக நடித்த கதாபாத்திரத்தினை யாராலும் தற்போதும் மறக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் பல திரைப்படங்களில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும் சினிமாத் துறையில் வலம் வந்தவர் தான் பொன்னம்பலம்.
சினிமாவில் தனக்கு கொடுத்த வில்லன் கதாபாத்திரத்தினை வைத்து மிரட்டிய பொன்னம்பலத்திற்கு, கடந்த ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த அவர்,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வது என்று திகைத்து கொண்டிருந்த வேளையில் தான், பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளுக்கும் அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் கல்விக்கான செலவினை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார். இது மட்டுமின்றி நடிகர் ரஜினியும் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலே பொன்னம்பலத்தின் உடல் நிலை மோசமான நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.
இச்சிகிச்சைக்காக ஏற்கனவே தமிழ் திரையுலகத்தினர் உதவி செய்த வந்த நிலையில், அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனையடுத்து, சிரஞ்சீவிக்கு காணொலி வாயிலாக நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த காணொலியில் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று தனது பேச்சைத் தொடங்கியுள்ள அவர், “ரொம்ப நன்றி அண்ணே! என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன் என்றும் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார். இதோடு உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே" என்று பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கொரோனா தொற்றின் பாதிப்பு சினிமாத்துறை கலைஞர்களின் வாழ்க்கையினை பாதித்துள்ளது. இதனையடுத்து கொரொனா நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஆரம்பித்து, பெருந்தொற்றின் காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் திரைப்படக்கலைஞர்கள் பலருக்கும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.