தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினசரி பல்வேறு தடுப்பு பணிகளையும், ஆய்வுப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக பதவியேற்றுக்கொண்டது முதல் மு.க.ஸ்டாலினும், அவரது அமைச்சரவையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி, கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவற்காக சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “தொற்று பரவும் வேகத்தை குறைக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 2-ஆம் தேதி முதலே கொரோனா தடுப்பு பணிகளை தொடங்கிவிட்டேன். என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தே அதிகளவில் ஆலோசித்தேன். தமிழ்நாட்டில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறும் நாளே உண்மையில் மகிழ்ச்சி அடைந்த நாளாக இருக்கும். அனைவரும் நெகட்டிவ் என என்று சொல்லப்படுமோ அன்றுதான் நான் முழு மகிழ்ச்சி அடைவேன். தடுப்பூசி. ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழ்நாட்டிலே தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தன்னுடைய உயிரை கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களிலும் கொரோனா கட்டளை மையம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். தி.மு.க. ஆட்சியமைத்து கடந்த 2 வாரங்களில் மட்டும் 16 ஆயிரத்து 938 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 300 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியைகொண்ட படுக்கைகள் ஆகும். மக்களிடம் நான் இறுதியாக கேட்பது எல்லாம் முகக்கவசம் அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள் என்பதுதான். தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. நம்மையும் காத்து, நம் நாட்டு மக்களையும் காப்போம் என்பதுதான் உறுதியான வேண்டுகோள்”. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு வரும் 24-ந் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் தினசரி கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தினசரி 35 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.