நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை வரும் 2026ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் களமிறங்கவுள்ளார். விஜய் கட்சிக்கு திரையுலகில் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கருணாஸ் தொடக்க காலத்தில் இருந்தே விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்தாண்டு விழுப்புரத்தில் நடந்த தவெக மாநாட்டில் திமுக என்று கட்சியின் பெயரை சொல்லாவிட்டாலும் மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். அதேபோன்று பிறர் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் செய்வது பாயாசமா என்ற சொல் அரசியலில் கவனிக்க வைக்கு சொல்லாடலாக மாறியது.
விஜய் மீது கடும் விமர்சனம்
இதற்கு விஜய்யை அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள். அப்போது நடிகர் கருணாஸ், பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பாதரசம் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறது. பாதரசம் மக்களிடம் ஒட்டாது. விஷத்தை கக்கக் கூடிய கொடிய திராவகம் இந்த பாதரசம். இந்த பாதரசம் தங்கம், வெள்ளியை உருக்குலைக்கும். நல்லா இருக்கும் நாட்டை கெடுக்க இதுபோன்ற பாதரசத்தை பாசிசங்கள் தான் உருவாக்குகிறது என்று பேசியிருந்தார். அதேபோன்று திமுக - பாஜக மறைமுக கூட்டணி என்று விஜய் பேசியதற்கு அதே பதிலை நான் சொன்னால் விஜய் பதில் கூறுவாரா? வாய்க்கு வந்தபடி இஸ்டத்திற்கு பேசக்கூடாது என்று கடுமையாக கருணாஸ் பேசியிருந்தார்.
விஜயை பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது
அதன் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்து வரும் கருணாஸ் வெளிப்படையாகவே திமுக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அதேபோன்று திமுகவை விஜய் விமர்சித்து பேசும்போதெல்லாம் முதல் ஆளாக தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது விஜய்யை பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மக்களின் பிரச்னைகளுக்கு உயிரை கொடுத்து வேலை செய்யணும். ஒரு படம் ரிலீஸ் ஆனால் 400 பேர், 500 பேர் கூட்டம் கூடுவது போல் வந்திருக்காங்க. ஆரம்பத்தில் நல்லா இருக்கும் போக போக போர் அடிச்சிடும் என கருணாஸ் கூறியுள்ளார்.