சினிமாவில் எல்லா ரேஞ்சிலும் நடித்து மதிப்பு மிக்கவராக இருக்க ஒரு சில நடிகர்களால் மட்டுமே சாத்தியமாகும். அப்படி வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகராக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக உள்வாங்கி அசால்ட்டாக நடிக்க கூடிய ஒரு நடிகர் பசுபதி. அவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  


 



பசுபதிக்கு வந்த திருப்புமுனை :

கதாபாத்திரத்தின் பின்னணி, பழக்கவழக்கங்கள், உடல் மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கக்கூடிய பசுபதி தனது கலை பயணத்தை கூத்து பட்டறையில் இருந்து தொடங்கினார். நடிகர் நாசர் மூலம் உலகநாயகனுக்கு அறிமுகமான பசுபதிக்கு முதலில் வழங்கப்பட்ட கதாபாத்திரம் வில்லன். அதுவும் அவரின் கனவு படமான மருதநாயகம் படத்தில். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படத்தின் பணிகள் நின்று போக ஒரு சில படங்களில் கிடைத்த சிறு கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து கொடுத்தார் பசுபதி. அதுவரையில் மக்கள் மத்தியில் பதியாத ஒரு முகமாக இருந்த பசுபதிக்கு ஒரு மிக பெரிய வாய்ப்பாக அமைந்தது 'விருமாண்டி' படத்தில் கொத்தாள தேவனாக அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம். அதுவே அவரின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் எனலாம்.

வில்லன் டூ காமெடியன் :

திருப்பாச்சி, சுள்ளான், மதுர என வில்லனாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த பசுபதிக்கு வாய்ப்புகள் குவித்தாலும் அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை வெளிகொண்டுவந்த பெருமையும் உலகநாயகன் கமல்ஹாசனையே சேரும். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் காமெடி கலந்த வில்லனாக கலக்கினார். சில நிமிடங்கள் மட்டுமே 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் 'சுகர் பேஷன்ட்’ அண்ணாச்சியாக நடித்திருந்தாலும் அவரின் காமெடி வெடி சரவெடியாக இருந்தது. வெயில் படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. ஹீரோவாக வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்தார் காரணம் ஒரு ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் ஒரு சிறப்பான நடிகராகவே இருக்க அவர் என்றுமே விரும்பினார்.



பெஸ்ட் ரோல்ஸ் :

குசேலன் பாலகிருஷ்ணா, தூள் ஆதி, ஈ படத்தில் நெல்லை மணி, அரவான் கொம்பூதி, வெயில் முருகேசன், மஜா ஆதி, கருப்பன் மாயி, திருப்பாச்சி பட்டாசு பாலு, சார்பட்டா பரம்பரை வாத்தியார், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அண்ணாச்சி போன்ற கதாபாத்திரங்கள் பசுபதி நடித்ததில் மிகவும் பிரபலமானவை.  

பசுபதியின் நன்றி உணர்வு :

தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என இன்று வரை பல்வேறு குணாதிசயம் கொண்ட பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இரு இடத்தை பிடித்துள்ளார் பசுபதி.  எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கண்முன்னே காட்டிச்சிப்படுத்த கூடிய மகா கலைஞன். சினிமாவில் நட்சத்திரங்களாக முன்னேறிய பலரும் மேடை நாடக கலைஞர்களாக இருந்து வந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் வெள்ளித்திரையில் பயணத்தை தொடங்கிய பிறகு ஏணிப்படியாய் இருந்த நாடக கலையை மறந்து விடுகிறார்கள். அப்படி இருப்பவர்கள் மத்தியில் இன்றும் நாடகங்களில் நடித்து வருகிறார் பசுபதி என்பது அவரின் நன்றி உணர்வை வெளிக்காட்டுகிறது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தன் மனதுக்கு விருப்பமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவரின் சிறப்பான நடிப்புக்கு ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

பசுபதிக்கு விருப்பமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்று அவரை திரையில் காண மிகவும் ஆவலுடன் இருக்கும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். இந்த பிறந்தநாள் அவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையையும், அமைதியான ஒரு மனநிலையையும், பல வெற்றிகளையும் குவிக்க வாழ்த்துக்கள்.