தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.ஆனாலும் ஒத்த செருப்பு படத்தின் தனி ஒரு நடிகராக படத்தில் நடித்ததற்கு தனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என வருத்தப்பட்டார் பார்த்திபன். ஒத்த செருப்பு படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இந்தி ரிமேக்கிற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
80-90 களில் பிரபலமான நடிகர் நடிகைகளாக வலம் வந்தவர்கள் பார்த்திபன் மற்றும் சீதா. புதியபாதை திரைப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் 2001-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சீதாவை நேசித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ”காதல் காதலாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பின் நாட்களில் நினைத்து பார்த்திருக்கிறேன். நிறைவேறாத காதல் புனிதமாகிவிடுகிறது. நிறைவேறிய காதலினால்தான் பிரச்சனை வருகிறது. ஆரம்ப நாட்களில் எனது அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் பிரச்சனைகள் வரும். நான் மனைவிக்குத்தான் ஆதரவாக பேசுவேன். அதற்கு என் அம்மா என்னை பொண்டாட்டி தாசனாக இருக்கிறாயே என கடிந்துகொள்வார். ஆம் நான் பொண்டாட்டி தாசனாகத்தான் இருந்தேன். மனைவியை நான்தான் தேர்வு செய்தேன், அம்மாவை நான் தேர்வு செய்யவில்லை. என்னை நம்பி வந்தவளுக்காத்தானே நான் பேச முடியும். விவாகரத்திற்கு பிறகு எனது குழந்தைகள் என்னிடம் வந்துவிட்டார்கள். எனவே பொறுப்புகள் அதிகமானதால் அந்த வலியை பேலன்ஸ் செய்ய எனது குழந்தைகள் உதவியாக இருந்தார்கள். என் குழந்தைகளுக்கு என்னால் கல்வி கொடுக்க முடிந்ததே தவிர, பொருளாதார நிலையை உயர்த்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் , சீதா இருவரும் பிரிந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் , இன்றளவும் பார்த்திபன் சீதா மீது தான் வைத்திருந்த காதல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.