ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி வாகை சூடிய ஒரு சிலரில் தனியிடத்தை பிடித்தவர் ஆர். பாண்டியராஜன். திருதிருவென அவரின் முழியும், துறுதுறுவென இருக்கும் அவரின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை காந்தம் போல ஈர்த்தது.  


நடிகராக அறிமுகம் :


தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக உருவான இயக்குநர் கே. பாக்யராஜ் நட்பை பெற்று அவரிடம் உதவி இயக்குநராக பல வெற்றி படங்களில் பணியாற்றிய கே. பாண்டியராஜன் 'கன்னி ராசி' படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். 100 நாட்களையும் கடந்து சக்கை போடு போட்ட அப்படத்தை தொடர்ந்து 1985ம் ஆண்டு 'ஆண்பாவம்' படத்தை இயக்கியதோடு நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். 100 நாட்கள் 200 நாட்கள் அல்ல 225 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 


 



சூரகனில் பாண்டியராஜன் :


தற்போது நடிகர் பாண்டியராஜன் 'சூரகன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் பாண்டியராஜன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தனது முதல் பட அனுபவம் குறித்து ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.


ஆண்பாவம் வெற்றியின் காரணம் :


ஒரு நடிகராக 'ஆண்பாவம்' படம் மூலம் அறிமுகமான பாண்டியராஜன் அப்படத்தின் வெற்றி குறித்து நேர்காணலில் பேசி இருந்தார். இன்று மக்களுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. ஆனால் அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா தான். படம் வெளியாகி விட்டது என்றாலே அது ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கை வேரூன்றி இருந்தது. அந்த நம்பிக்கைக்கு என்ன காரணம் என அவரிடம் கேட்கப்பட்டது. 


பாண்டியராஜன் பேசுகையில் " ஒரு படத்தின் வெற்றி படம் வெளியான முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். முதல் காட்சி பார்த்த மக்களின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்து படம் வெற்றி பெற்றுவிடுமா இல்லையா என்பதை கணித்துவிடலாம்.



தூக்கிவாரி போட்ட முதல்காட்சி :


ஆண்பாவம் படத்தின் முதல் காட்சியை நான் திரையரங்குக்கு சென்று பார்த்தேன். அப்போது திரையரங்கை பார்த்தால் பீச்சில் உட்கார்ந்து இருப்பதுபோல இரண்டு இரண்டு பேராக உட்கார்ந்து இருக்கிறார்கள்.  மொத்தமே 19 பேர் தான் இருந்திருப்பாங்க. அதை பார்த்து எனக்கு நெஞ்சு வலியே வந்துவிடும்போல இருந்தது. வெளியில் வந்த நான் அழவும் தயாரிப்பாளராகள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்குள் வருத்தம் இருந்தாலும் நம்ம படம் சின்ன படம் தான் பிக்கப் ஆகிவிடும் என என்னை தேற்றினார்கள். 


ஆனால் ஆண்பாவம் படத்தின் மதிய காட்சி நன்றாக போனது என பத்திரிகைகளில் ரிப்போர்ட் வருகிறது. நான் தான் காலையிலேயே முதல் காட்சியை பார்த்துவிட்டேனே அப்புறம் என்ன மதியம் ஷோ நல்லா இருந்ததது என என்னை நானே கேட்டு கொண்டேன். ஆனால் பலரும் படம் நன்றாக இருக்கிறது என சொல்ல நான் காலையில் பார்த்த அதே தியேட்டருக்கு சென்று நைட் ஷோ பார்த்தேன். ஹவுஸ் புல் காட்சி, பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்கிறார்கள். அதை பார்த்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவர் என் காதில் படுவதுபோல என்னை திட்டிக்கொண்டு செல்கிறான். எவனோ பாண்டியராஜனாம், காமெடியில் கலக்கியிருக்கான் என சொல்வதை கேட்டேன். 


காலை காட்சியில் பீச்சில் இருப்பது போல வெறிச்சோடி இருந்த ஜனம் நைட் ஷோவில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு இருந்துது. அது தான் சினிமா. ஓவர்நைட்ல லைப் மாறிச்சு. அது தான் மீடியாவின் பலம்" என தன்னுடைய அனுபவம் பகிர்ந்து இருந்தார் பாண்டியராஜன்.