தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து எட்டுப்பட்டி ராசாவாக இன்று வரை ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் நெப்போலியன். நடிகர் என்பதை தாண்டி எம் எல் ஏவாக இருந்து பின்னர் மத்திய அமைச்சராக பதவியும் வகித்தவர். ஆனால், இப்போது தனது குடும்பத்திற்காக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலிருந்தும் விலகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

அங்கும் அவர் தன்னை ஒரு விவசாயியாக மட்டுமின்றி சிறந்த பிஸினஸ்மேனாகவும் காட்டிக் கொண்டுள்ளார். ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் அம்பானி போல் ஏராளமான வசதிகளுடன் வாழ்ந்து வரும் நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பார்க்காத வைத்தியம் கிடையாது. போகாத மருத்துவமனை கிடையாது. எனினும் குணப்படுத்த முடியவில்லை. ஆனால், திருநெல்வேலியில் மயோபதி மருத்துவமனையில் தனுஷிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த மருத்துவமனையில் இதே போன்று தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், அந்த மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக அந்த மருத்துவமனையை பெரிதாக விரிவுபடுத்தி இலவச சிகிச்சை அளிக்க பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தான் நெப்போலியனின் நண்பர், மற்றும் மயோபதி மருத்துவருமான ஜீவன் தனது இன்ஸ்டாகிராம்ப் பக்கத்தில் மயோபதி தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மயோபதி மருத்துவமனை கட்ட பூமி பூஜை போடப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மூலமாக குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.