நவாசுத்தின் சித்திக்
மேடை நாடகங்களில் நடித்து பின் திரைக்கு வந்தவர் நடிகர் நவாசுத்தின் சித்திக். அனுராக் கஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் படத்தின் மூலம் இவருக்கும் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து லஞ்சு பாக்ஸ் , ராமன் ராகவ் , ஃபோட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். இப்படம் அவருக்கு தமிழில் மார்கெட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கவனிக்கப்படாமலே போனார். மிக சுமாரானா பாத்திர படைப்பும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். மேலும் இப்படத்தில் தனக்கு மொழி கடந்து நடிக்கும்போது ஏற்படும் நிறைய சவால்கள் இருந்ததாகவும் இதனால் தன்னால் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.
மகளை நடிகையாக்க பாடுபடும் நவாசுத்தின் சித்திக்
நடிகர் நவாசுத்தின் சித்திக்கிற்கு யானி என்கிற மகனும் ஷோரா என்கிற 14 வயது மகளும் இருக்கிறார்கள். சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஷோரா தற்போது லண்டனில் நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பற்றிய வகுப்புகளையும் எடுத்து வருகிறார். ஆனால் தன்னுடைய மகள் திசை திரும்பிவிடாமல் தரமான கலையை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் அவரது தந்தை. இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
" கலை என்பது ஒரு சாதாரணமான விஷயம் இல்லை. உங்களுக்கு என்று தனிப்பட்ட ரசனை ஒன்று இருக்க வேண்டும் . என்னுடைய குழந்தைகளை சின்ன வயதில் இருந்தே நல்ல கலையை தேடிப்போகும் படி வலியுறுத்தி வருகிறேன். என் மகளுக்கு 14 வயதாகிறது . இந்த வயதிலேயே அவள் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றி பயிற்சி வகுப்புகள் எடுக்கிறாள். என் குழந்தைகள் எந்த மாதிரியான கலையை நுகர்கிறார்கள் என்பதில் நான் ரொம்ப அழுத்தம் கொடுத்து வருகிறேன். இன்றைய சூழலில் தேவையில்லான நிறைய விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அதை எல்லாம் பார்த்து தொலைந்து போய்விடாமல் உங்களுக்கான ரசனையை வளர்த்தெடுப்பது அவசியமானதாக இருக்கிறது. நம் நாட்டில் மாண்டோ , பிரேம்சந்த் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் அவர்களை படிக்க வேண்டும் . " என்று அவர் தெரிவித்துள்ளார்