சினிமாவில் எந்த துறைக்கு வருவதாக இருந்தாலும் படங்கள் நிறைய பார்க்க வேண்டும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பணியை தொடங்கி இந்தியில் முக்கியமான நபராக வலம் வருகிறார் நட்டி. தமிழில் பல படங்களில் நடித்துள்ள அவர் சதுரங்க வேட்டை, முத்துக்கு முத்தாக, கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை, சமீபத்தில் வெளியான மகாராஜா படம் என நடிப்பிலும் பரிணாமித்து வருகிறார்.
இவர் ஒரு நேர்காணல் ஒன்றில் ஒளிப்பதிவு பற்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நீங்கள் ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்றால் ஃபோட்டோகிராபியை புரிந்து கொள்ள வேண்டும். என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அது படங்கள் பார்த்தால் புரிந்து விடும். அதன்பிறகு படிக்க வேண்டும். உங்கள் கண்கள் மற்றும் காதுகளை திறந்து வைத்திருங்கள் என்பதற்கேற்ப செயல்பட வேண்டும். ஒரு கதையில் என்ன வேண்டும் என்பதை புரிய வேண்டும். ஒரு காட்சி மதியம் நடக்க வேண்டும் என்றால் லைட்டிங் எப்படியெல்லாம் வரும், எந்தளவு இருக்கும் என தெரிய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என நினைப்பவர்கள் அதிக படங்கள் பார்க்க வேண்டும். சினிமாவில் எந்த துறைக்கு வருவதாக இருந்தாலும் படம் பார்க்க வேண்டும். அதன் தாக்கம் தான் உங்களால் சாதிக்க முடியும். உங்களுக்கான இலக்கு எப்போது, எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதனால் எதற்காகவும் தயாராக வேண்டும். என்னுடைய மாமாவின் கேமராவை எடுத்துக் கொண்டு தான் பயிற்சி பெற்றேன்.
இந்த காலத்தில் எல்லாருடைய கையிலும் செல்போன் வந்துவிட்டது. நல்ல குவாலிட்டியான கேமரா கொண்டு ஃபோட்டோ எடுக்கிறார்கள். அதேசமயம் இதற்காகவே பயிற்சி எடுத்து இருப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வித்தியாசத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பயிற்சி பெற்றவர்கள் எடுத்துள்ள போட்டோக்களின் நுணுக்கம், கேமராவில் ஃபோட்டோ எடுப்பவர்களிடத்தில் இருக்காது. போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஃபோட்டோகிராபர் ஆகி விட முடியாது. சில ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கிறேன். போன் கேமராவில் இப்படியெல்லாம் எடுக்கலாமா என ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் வர வர அதிலிருக்கும் நுணுக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உங்களிடம் கேமரா இருக்கிறதென்றால் அதை வைத்து நீ என்ன செய்துள்ளாய் என்பதில் தான் மற்றவர்களிடத்தில் தனித்து தெரிய வைக்கும்” என நட்டி தெரிவித்துள்ளார்.