சந்திரமுகி படத்தில் மாறிப்போன காட்சி ஒன்று குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 


கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், சோனுசூட், விஜயகுமார், செம்மீன் ஷீலா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சந்திரமுகி”. இப்படத்தை பி.வாசு இயக்கிய நிலையில் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தை நடிகர் பிரபு தனது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சொந்தமாக தயாரித்திருப்பார். 


இதனிடையே சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி மாற்றப்பட்டது குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதில், ”ரஜினிகாந்துடன் ஒரு முக்கியமான விஷயம் ரொம்ப நாள் கழிச்சி எனக்கு நடந்தது. சந்திரமுகி படத்தில் பிரபு வந்து ரஜினியை வீட்டை விட்டு விரட்டும் காட்சி இடம் பெற்றிருக்கும். கதைப்படி பிரபு தான் அவரை வெளியே தள்ள வேண்டும். நண்பனே தன்னுடைய நண்பனை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்புவது போல தான் கதையில் காட்சி எழுதப்பட்டிருந்தது.



ஆனால் இயக்குநர் வாசுவிடம், நான் எப்படி சூப்பர் ஸ்டாரை வெளியே தள்ளுவது மாதிரி நடிக்க முடியும்? என கேட்டார் பிரபு. அவரை அடிச்ச மாதிரி நடிச்சா நாளைக்கு நான் வெளியே போக முடியாது எனவும் சொல்லி விட்டார். இந்த காட்சியை நான் பண்ண மாட்டேன் என சொன்னார். இதனைத் தொடர்ந்து விஜயகுமாரை வைத்து பண்ணலாமா என நினைக்க, அவரும் என்னால் முடியாது என மறுத்து விட்டார். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். எதார்த்தமாக வாசு என்னை பார்த்தார். நான் உடனே சார் நான் ரஜினியை வெளியே தள்ளுகிறேன் என சொல்லி அந்த காட்சியில் நடித்தேன்” என நடிகர் நாசர் தெரிவித்திருப்பார். 


சந்திரமுகி 2 படம் 


இதனிடையே பி.வாசு இயக்கத்தில் கடந்தாண்டு “சந்திரமுகி 2” படம் வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ராதிகா, மகிமா நம்பியார், வடிவேலு, மனோபாலா, விக்னேஷ், பேபி மானஸ்வி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். மரகதமணி  இசையமைத்த இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய  மொழிகளில் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்த சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா? - டென்ஷனான நடிகை கௌரி கிஷன்