நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் மூலம் நடிகர் நாசரின் தம்பி அறிமுகமாகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான‘8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் 2வது படம் ‘ஜீவி’. இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜீவி படம் வசூலில் சாதனைப் படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருணாகரன், ரோகிணி, மைம் கோபி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில் அறிமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படத்தின் முக்கோண எஃபெக்ட் கதையம்சம் பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் உருவாக்கப்பட்டதால் படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிக்கப்பட்டிருக்கும்.
இதனைத் தொடர்ந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜீவி-2 உருவாவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் எடுத்திருக்க முடியாது என்ற அளவில் ஜீவி 2 படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்படத்தின் டீசரை கடந்த ஜூலை 2 ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜீவி-2 படமானது நேரடியானது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுதொடர்பாக வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ஒரு நாள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆபீஸில் இருந்து போன் வந்ததாகவும், இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.
பனி விழும் மலர் வனம் என்ற ஒரு படத்தில் நான் ஏற்கனவே ஹீரோவுக்கு அப்பாவா நடிச்சேன். ஆனால் வயசான என் அப்பா, மனநிலை சரியில்லாத என் தம்பி ஆகியோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் இந்த படத்துல நடிக்க தயங்கினேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எனக்கு வசதியான ஷெட்யூலை பிளான் பண்ணி கொடுத்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரலாம் என படம் பார்த்த சில பேர் சொன்னாங்க என ஜவஹர் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த கேரக்டருக்கு இயக்குநர் கௌதம் மேனனை அப்ரோச் பண்ணிருக்காங்க. அவரால கால்ஷீட் பிரச்சனை காரணமாக பண்ண முடியல. அதனால் என்னை எப்படி தெரிஞ்சி கூப்பிட்டாங்கன்னு தெரியல என ஜவஹர் கூறியுள்ளார்.