லோகேஷ் கனகராஜ்


 மாநகரம், கைதி , மாஸ்டர், விக்ரம், லியோ ஆகியப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். வெகுஜன சினிமா பரப்பில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை துணிச்சலாக முன்னெடுத்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சினிமா உலகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் எல்.சி யு வில் இணைந்தது ரசிகர்களுக்கு அளவு கடந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதுவரை எல்.சி.யுவில் கார்த்தி, சூர்யா , கமல்ஹாசன், விஜய் ஆகிய நடிகர்கள் இணைந்துள்ளார்கள். 


எல். சி . யுவில் அடுத்து என்ன


எல்.சி.யுவில் அடுத்த படமாக உருவாக இருப்பது கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முந்தைய பாகத்தில் நடித்த கார்த்தி, நரேன், ஜார்ஜ் , தீனா, உள்ளிட்டவர்கள் மற்றும் இன்னும் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். இந்நிலையில் கைதி படத்தில் நடித்த நடிகர் நரேன் மேலும் ஒரு கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


எல்.சி.யுவை பற்றி குறும்படம்






சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய  நரேன் இதுவரை லோகேஷ் கனகராஜ் வெளியே சொல்லாத ஒரு ரகசியத்தை பகிர்ந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் நரேன் நடித்து ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பதாகவும் இந்த குறும்படம் எல்.சி யுவைப் பற்றிய ஒரு அறிமுகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். கைதி 2 படம் வெளியாவதற்கு முன் இந்த குறும்படம் யூடியுபில் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.


தலைவர் 171


லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்தின் திரைக்கதை அமைக்கும் பனியில் இருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சில காட்சிகள் ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப் பட இருக்கின்றன. 


இதுதவிர்த்து தற்போது தயாரிப்பாளராக லோகேஷ் கனகராஜ் தயாரித்திருக்கும் படம் ஃபைட் கிளப். உறியடி விஜயகுமார் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.