Just In





Dasara Movie: ரசிகர்களை கவர்ந்த ‘தசரா’ படத்தின் 2-ஆம் பாடல்.. சக்கைபோடு போடும் வீடியோ
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள படம் “தசரா”

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் 2 ஆம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள படம் “தசரா”.இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தசராவில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான தசரா படத்தின் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரத்தமும் சதையுமான ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தசரா டீசரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
தசரா படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலாக “தீக்காரி” வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும் வகையில் அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.