அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட.  கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார்.  2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு,  கடும்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.










 

இந்நிலையில்,  இம்ரான் கான் மீதான ரகசியங்களை கசியவிட்ட  வழக்கின் விசாரணை இன்று (30.01.2024) ராவல்பிந்தியிலுள்ள (Rawalpindi) சிறையில் நடைபெற்றது. இதற்கான ’Official Secrets Act' கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நீதிபதி Abul Hasnat Zulqarnain தலைமையில் நடைபெற்றது. பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் (Pakistan Tehreeke-e-Insaf (PTI)) கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி (Shah Mahmood Qureshi) இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தர்.

 

ஏற்கனவே, இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை இல்லை; எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்றும் தெரிவித்துவந்தார். பிப்ரவரி -8 ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.