நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியாகியுள்ள வீர சிம்ஹா ரெட்டி படம் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்த படத்தில் ஹீரோயின்களாக ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையைமத்துள்ள நிலையில் பாடல்கள் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. இதே நாளில் தெலுங்கில் சிரஞ்சிவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும் வெளியானதால் இரண்டு படங்களில்  எது வெற்றிப் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  இதனிடையே வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி வெளியானது. 

பஞ்ச் வசனங்களுடன் அறிமுமான பாலகிருஷ்ணா சுத்தியலை கொண்டு எதிரிகளை பறக்கவிடுவதும், பேனர் ஒன்றில் துணியை காயப்போடுவது போல எதிரிகளை மாட்டி விடுவதும் என அசர வைத்திருந்தார். முழுக்க முழுக்க மாஸ் மசாலா என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாகியிருக்கும் இப்படத்தை காண தியேட்டர்களில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர். 

இந்நிலையில் முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் சில காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் காலை வைத்து கார் ஒன்றை நகர்த்தும் வீடியோவை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். லாஜிக் என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு தமன் தனது பின்னனி இசையால் எப்பேர்ப்பட்ட காட்சியையும் நம்ப வைத்து விடுவார் போல பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.