தெலுங்கில்  நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வீர சிம்ஹா ரெட்டி படம் குறித்து ரசிகர் ஒருவர் சொன்ன விமர்சனம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்த படத்தில் ஹீரோயின்களாக ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் வீர சிம்ஹா ரெட்டி படத்தை தயாரித்துள்ள நிலையில்,  தமன் இசையைமத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி வெளியானது. 






பஞ்ச் வசனங்களுடன் அறிமுமான பாலகிருஷ்ணா சுத்தியலை கொண்டு எதிரிகளை பறக்கவிடுவதும், பேனர் ஒன்றில் துணியை காயப்போடுவது போல எதிரிகளை மாட்டி விடுவதும் என அசர வைத்திருந்தார். முழுக்க முழுக்க மாஸ் மசாலா என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாகியிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 


இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர சிம்ஹா ரெட்டி  இன்று திரையரங்குகளில் வெளியானது. இதே நாளில் தெலுங்கில் சிரஞ்சிவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும் வெளியானதால் இரண்டு படங்களில்  எது வெற்றிப் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  இதனிடையே வீர சிம்ஹா ரெட்டி படத்தைக் காண தியேட்டர்களில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர். 


இந்நிலையில் முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் சில காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் காலை வைத்து கார் ஒன்றை நகர்த்தும் வீடியோவை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.  படத்தின் இடைவேளை சமயத்தில் பாலகிருஷ்ணாவின் ரசிகர் ஒருவர் வீர சிம்ஹா ரெட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார். 






அப்போது அங்கு வரும் இன்னொரு நபர் “படம் குப்பை..குப்பை” என தெரிவிக்க, பாலகிருஷ்ணா ரசிகரோ டென்ஷனாகிறார். அவரை கவனித்த அந்த நபர், “என்ன பார்க்குற...முதல் பாதி நல்லாவே இல்ல” என மீண்டும் கூறிக்கொண்டே தியேட்டர் இருக்கைக்கு செல்கிறார். இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற பாலகிருஷ்ணா ரசிகர் தியேட்டரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை எடுத்துக் கொண்டு உள்ளே அந்த நபரை தாக்க செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.