தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நகுல். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக உலா வந்த நடிகை தேவயானியின் தம்பியான இவர், பாய்ஸ் படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார்.


பாடகராகவும் பட்டையை கிளப்பிய நகுல்:


நடிகர் நகுலுக்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். பாய்ஸ் படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தாலும் அதற்கு அடுத்து நடித்த நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், நாரதன் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. 2015ம் ஆண்டு 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படம் மட்டும் நகுலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.


நடிகராக நாம் அறிந்த நகுல் மிகச்சிறந்த பாடகரும் ஆவார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பல பாடல்களை நகுல் பாடியுள்ளார் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத செய்தி ஆகும். அதுவும் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி ஆகியோரின் இசையில் இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.


இத்தனை பாடல்களா?


நடிகர் நகுல் முதன் முதலில் அந்நியன் படத்தில் இடம்பெற்ற காதல் யானை வருகிறான் என்ற பாடல் மூலமாக முதன்முதலாக பாடகராக அறிமுகமானார். இதே பாடலை தெலுங்கிலும், இந்தியிலும் நகுலே பாடியுள்ளார். அதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற மஞ்சள் வெயில் மற்றும் கற்க கற்க பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இதே பாடல்களில் தெலுங்கு பதிப்பான பச்சா வெலுகு மற்றும் கட்டி சோஸ்தேவையும் நகுல் பாடியுள்ளார். சிம்பு கதாநாயகனாக நடித்த வல்லவன் படத்தில் இடம்பெற்ற ஹூரே ஹூரே என்ற பாடலையும் பாடி நகுல் அசத்தியுள்ளார்.


நகுல் நாயகனாக நடித்த கந்தகோட்டை படத்தில் இடம்பெற்ற எப்படி என்னுள் காதல் என்ற பாடலையும் தீனா இசையில் பாடியிருப்பார். அதேபோல, விஜய் ஆண்டனி இசையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நாக்கு மூக்க பாடலையும் நகுல்தான் பாடியுள்ளார். இந்த பாடல் தமிழ்நாடு முழுவதும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமன் இசையில் வெளியான நகுல் நாயகனாக நடித்த வல்லினம் படத்தில் இடம்பெற்ற நகுலா பாடலையும், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் இடம்பெற்ற லைவ் தி மொமண்ட் பாடலையும் நகுல் பாடியுள்ளார்.


பாடகராக பல மறக்க முடியாத பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்திய நகுல் இனி வரும் காலங்களிலும் மேலும் பல மறக்க முடியாத பாடல்களை பாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் அவருக்கு வெற்றிப்படங்கள் அமைய ஏபிபி நாடுவின் பிறந்தநாள் வாழ்த்துகள்.