நகைச்சுவை கலைஞர்கள் எத்தனையோ பேர் வலம் வந்தாலும் எக்காலத்திற்கும் ரசிகர்கள் நினைவு கொள்ளும் நகைச்சுவை நடிகர்களில் எப்போதுமே முதன்மையானவர் நடிகர் நாகேஷ். பல படங்களில் அடுத்தவரை உருவ கேலி செய்து நகைச்சுவைகளில் ஈடுபடும்போது தன்னுடைய படங்களில் அதுபோன்ற செயல்கள் இல்லாமல் தன்னுடைய உடல்மொழி, முக பாவனை, வசன உச்சரிப்பு ஆகியவற்றால் கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடிகொண்டவர்.


தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ்.  ஜனவரி 31ஆம் தேதி (இன்று) நாகேஷின் மறைவு தினம். அவரின் நினைவைப் போற்றுகின்ற வகையில் அவரது சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


நாகேஷ் தியேட்டர்:


தி. நகர், பாண்டி பஜாரில் அவர் ஒரு சினிமா தியேட்டரைக் கட்டினார். அதற்கு ஆசை ஆசையாக 'நாகேஷ் தியேட்டர்' என்றும் பெயர் வைத்தார். அதற்கான திறப்பு விழாவுக்குத் தடபுடல் ஏற்பாடுகளைக் கூட செய்து முடித்து விட்டார். ஆனாலும் அந்தோ...! தமிழக அரசின் அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடித்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே இந்த தியேட்டர் இருப்பதால் இதற்கு அனுமதி கொடுப்பதில் சட்டச்சிக்கல் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் இழுத்தடித்துக் கொண்டே இருந்தனர். 





முட்டி முயன்று பார்த்தும்...நடைபெற்றது என்னவோ தடைபெற்றதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். 
அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரைப் போய்ப் பார்த்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் நாகேஷை எம்ஜிஆர் உற்சாகத்தோடு வரவேற்று, திரை உலக அனுபவங்கள் பற்றி ஆர்வத்தோடு உரையாடினார். 
"எதற்கு வந்தீர்கள்? என்ன வேண்டும்? "என்று எம்ஜிஆர் கேட்டார். 


முதலிரவுக்கு மட்டும் தடை:


நடிகர் நாகேஷ் விநோத விளக்கத்தை விவரித்தார். அது இதோ: "கல்யாணம் பண்ணிட அனுமதி தந்தீர்கள். தாலி கட்டியாகிவிட்டது. சாந்திமுகூர்த்தத்திற்கு மட்டும் ஏன் தடை? "சினிமா உலகில் கதைசொல்லிகளுக்கான  ஒன்லைன் ஸ்டோரி  போல அந்த வாசகம் அமைந்திருந்தது. அதைக் கேட்டு முதலில் வாய்விட்டுச் சிரித்த எம்ஜிஆர், "என்ன விவரம்? "என்று விளக்கிடக் கேட்டார்.




"தி. நகர், பாண்டி பஜாரில் நாகேஷ் தியேட்டர் கட்டி இருக்கிறேன். இதற்கு எல்லா அனுமதியும் கொடுத்து விட்டீர்கள். பிறகு தான் கட்டி முடித்தேன். அதற்குத்  திறப்பு விழா நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தியேட்டரில் திரையிடல் அதனால் தான் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது." -இப்படியாகத்தான் தனது கோரிக்கை பற்றி நாகேஷ் நாசுக்காக நாவாடினார்.


விஜயா மஹால்:


"சினிமா பாணியிலேயே சிக்கலைச் சொல்லி விட்டீர்களே!"என்று நாகேஷை பாராட்டினார் எம் ஜி ஆர். அதன் பிறகு சொல்லவா வேண்டும்! அதிரடி ஆணைகள் பறந்தன.  நாகேஷ் தியேட்டருகான அனுமதி கிடைத்தது. நாகேஷ் காலத்தின்போதே தியேட்டரைச் சரிவர நடத்த முடியாமல் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டு, தியேட்டரை மூட வேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது ஒரு கல்யாண மண்டபமாகி, விஜயா மஹால் என்ற பெயரில் புழங்குகிறது. 


கட்டுரை  - ஆர் நூருல்லா, மூத்த பத்திரிகையாளர்


தவிர்க்க முடியாத நட்சத்திரம்:


ஒரு சில கலைஞர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டும் அடக்கவிட முடியாது. நாகேஷை வெறும் நகைச்சுவை கலைஞர் என்று மட்டும் அடக்கிவிட முடியாது. நகைச்சுவை நடிகர், நடனக்கலைஞர், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன், கதாநாயகன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.




1933ம் ஆண்டு பிறந்த நாகேஷ் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராகவே வலம் வந்தவர். 1959ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படம் மூலமாக அறிமுகமான நாகேஷ் அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகின் அத்தனை படங்களிலும் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக இருந்தார்.


எம்.ஜி.ஆர். முதல் அஜித் வரை:


அவரது திறமைக்கு அடையாளமாக சொல்ல வேண்டுமென்றால் அந்த படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், அர்ஜூன், விஜய், அஜித், தனுஷ் என நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து அசத்தியுள்ளார்.




கடைசியாக தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார். அவர் மறைந்த பிறகும் அவரை பெருமைப்படுத்தும் விதமாக கோச்சடையான் படத்தில் அவரது தோற்றத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அசத்தியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்தாலும் இன்றும் திரையில் நம்மை ரசிகர்களுக்கு ஆனந்தப்படுத்தும் கலைஞராக, கலைஞர்களுக்கு கற்றுத்தரும் ஆசானாகவே நாகேஷ் வாழ்கிறார்.