கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு. சந்திரபாபு சுருளிராஜன் கவுண்டமனி வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூறாய் போடவேண்டுமென்றால் அது நாகேஷுக்கு முன், பின் என்றுதான் வரையறுக்கமுடியும். வெறும் வசனங்களால் மென்மையாய் போய்க்கொண்டிருந்த நகைச்சுவையை, உடல்மொழியால் பேசி விறுவிறுப்பான பாணியில் கொண்டுபோனவர் அவர்தான்.


இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க முற்படும்போது மனோரமாவின் அண்ணனாக வரும் ஜெமினி பாலகிருஷ்ணனிடம் நாகேஷ், உடல் மொழியோடு பேசும் வசன வித்தை, அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒன்று. சிவாஜியின் திருவிளையாடல் (1965) பாடத்தில் பரிசு கிடைக்காத ஏமாற்றத்தோடு கோவிலிவில் தனியாக, ஆனால் பலரும் சுற்றியிருப்பதாக நினைத்துக்கொண்டு புலம்புவார் தருமி. அந்த ஏழைப்புலவன் பாத்திரத்தில் நாகேஷ் காட்டிய நடிப்பு, வெறித்தனமான ஒன்று.


எம்ஜிஆரின் அன்பே வா(1966) படத்தில்,



  1. அற்புதமான சீசன்,

  2. அருமையான பங்களா

  3. அள்ளிக்கொடுக்க வள்ளல் நீங்க

  4. அக்காவும் மாமாவும் அங்க

  5. ஆசைக்கு உரிய கண்ணம்மா இங்க

  6. கிளிமாதிரி பொண்ணு

  7. கிட்டப்போனா புலிமாதிரி பாயறா..

  8. அடப்போய்யா சிரிக்காமா என்ன பண்றது


நொந்துபோன மனநிலையில் எம்ஜிஆரிடம் நாகேஷ் பேசும் எட்டே எட்டு மைக்ரோ வரிகள்..


நொந்துபோன மனநிலை என்றாலும் ‘’அற்புதமான,  அருமையான , அள்ளிக்கொடுக்க என்ற வார்த்தைகளை சொல்லும்போது அவர் காட்டும் பிரமிப்பும், கடைசியில் அட போய்யா என்று அத்தனை சலிப்போடும் சொல்லும் விதம்… எத்தனையெத்தனை பாவனைகள். அதுதான் நாகேஷ் நாகேஷ்..நாகேஷ்.


எப்போதும் அளவுக்கு அதிகமாக சிரிக்கவைப்பவர்களின் பின்னணியில் நிச்சயம் ஒரு சோக வரலாறு இருக்கும், நாகேஷுக்கும் அப்படியே.


கொழுகொழுவென குண்டாக இருந்த நாகேசுக்கு இயற்பெயர் குண்டுராவ். தாராபுரத்தில் ஒரு ரயில்வே ஊழியரின் மகன். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த போதுதான் அம்மை வந்து முகமே மாறியது. ரயில்வே ஊழியராய் இருந்தபடி, ஒய்ஜி பார்த்தசாரதியின் நாடகக்குழுவில் பங்கேற்று ஸ்ரீகாந்த், வாலி ஆகியோருடன் ஆதி காலத்தை ஆரம்பித்தவர்தான், தமிழ் சினிமாவில் காமெடி என்பதற்கே இலக்கண புத்தகமாக மாறிப்போனார்.


நாகேஷின் வாழ்க்கைப் பயணம், சுமூகமானதல்ல. கடுமையான ஏற்ற இறக்கங்களை கொண்டது. கொழுகொழுவென்று குண்டா இருந்த குண்டுராவுக்கு இளவயதில் திடீர் அம்மையால் முகமே கொத்து போடப்பட்ட ஆட்டுக்கல்லாகிப்போனது மகா கொடுமை.  கண்ணாடியில் பார்த்து பார்த்து அழுவதை நிறுத்திக்கொண்ட குண்டுராவ் ஒரு கட்டத்தில் சுய பச்சாதாபத்தை போய்வா என்று சொன்னார். ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் பின்னடைவே சாதனைக்கு அவனை தயார்படுத்தும் என்கிற அடிப்படையில், நாடகப்பக்கம் இழுத்தது இயற்கை. 




வயிற்றுவலி காரணமாய் நாகேஷ் நடித்த ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்கினார் புரட்சி நடிகர் எம்ஜிஆர். நாடகம் பார்த்த அவருக்கு தெரிந்துவிட்டதுபோல.. அங்கேயே நாகேஷை அழைத்து பின்னாளில் நீ பெரிய நடிகனாய் வருவாய் என்று வாழ்த்தினார். அதன்பிறகு சினிமா ஆசை இன்னும் அதிகமாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அடுத்து, மனசு தாவிய இடம், சினிமா.. நண்பனாய் அமைந்த நடிகர் பாலாஜியிடம். நண்பன் என்பதையும் தாண்டி நாகேஷுக்கு அவர் கடவுளாகவே திகழ்ந்தார். காரணம் அலைந்து அலைந்து படவாய்ப்புகளை தேடித் தந்தவர் பாலாஜிதான்.


நாகேஷின் பிறந்தநாள் விவரம்போல அவரின் முதல் படமும் எதுவென சர்ச்சை. தாம்தான் 1959-ல் வெளியான தாமரைக்குளம் படத்தில் நாகேஷுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக இயக்குர் தயாரிப்பாளர் முக்தா வி சீனுவாசன் சொல்வார். ஆனால் அதற்கு முன்போ பாலாஜி கதாநாயகனாக நடித்த மானமுள்ள மறுதாரம் (1958) படத்தில் நாகேஷ் நடித்துவிட்டார் என்ற விவரமும் உண்டு. இதன்பிறகு, சில படங்களில் நாகேஷ் வந்துபோனாலும் அவருக்கு மிகப்பெரிய பிரேக் என்றால் அது ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1962) படம்தான்  


வார்டுபாய் பாத்திரத்தில் நடிக்கவேண்டிய ராமராவ் (அப்ளாச்சாரி) வருவதற்கு லேட் ஆனதால்,  இன்னொரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வந்திருந்த நாகேசை வைத்து ‘சும்மானாங்காட்டியும்’ என ரிஹர்சல் பார்க்கப்பட்டது. டைரக்டர் ஸ்ரீதர் முன்பாக. காமெடியில் அப்படியொரு மிரட்டல். அப்புறமென்ன, ராமராவ் பாத்திரம் நாகேஷுக்கு வந்து, இவர் பாத்திரம் அவருக்கு போய்விட்டது..




இதன்பிறகு எம்ஜிஆருடன் பணத்தோட்டம், பெரிய இடத்துப்பெண் என இரண்ட படங்களில் வாய்ப்பு, பணத்தோட்டம் படத்தில் காமடி டிராக் தனியாக வரும் ஆனால் பெரிய இடத்து பெண் படத்தில் கதையின் முக்கிய மையப்புள்ளியே நாகேஷ்தான். வில்லனின் சூழ்ச்சியால்  பக்கா கிராமப்புற கதாநாயகனுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதும் பின்னர் தவறை உணர்ந்து கிராமத்தானையே நகரத்து ஆசாமிபோல் டிப் டாப்பாக மாற்றி பணக்கார கதாநாயகியை கைப்பிடிக்கவைக்கும் முக்கிய பாத்திரம். கதாநாயகனோடு சேர்த்து பேசப்படும் பாத்திரம் முதன் முதலாய் கிடைத்தது எம்ஜிஆரின் பெரிய இடத்து பெண் படத்தில்தான். 


அதன்பின் காதலிக்க நேரமில்லை, எங்கவீட்டு பிள்ளை, திருவிளையாடல், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா,அதே கண்கள், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், வசந்தமாளிகை என தமிழ் சினிமாவின் காவியங்கள் அனைத்திலும் இவரின் பாத்திரங்கள் நாயகன்களுக்கு அப்படியொரு சவால் கொடுத்தவை.


டாப் ஸ்டார்களான எம்.ஜிஆர், சிவாஜியே காத்திருக்கவேண்டிய அளவுக்கு செம பிசியாக இருந்தவர் நாகேஷ் என்றால், மற்ற நடிகர்களின் காத்துக்கிடப்பு பற்றி சொல்லியா தெரிய வேண்டும்?


நீர்க்குமி்ழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்றவையெல்லாம் நாகேஷின் தனி ஆவர்த்தனத்திற்காகவே எடுக்கப்பட்டவை. லோ பட்ஜெட்டில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு அடுத்தடுத்து கைகொடுத்து ஏற்றிவிட்ட ஏணி நாகேஷ்தான்.  அபூர்வ ராகங்கள் படத்தில் அந்த குடிகார டாக்டர் சூரியாக அசத்திய விதம்..அதிலும் சர்வர் சுந்தரத்தை ஒற்றை ஆளாய் தூக்கிக் கொண்டுபோன விதம் முத்துராமன்-கே.ஆர்விஜயா ஜோடியே அவுட் ஆஃப் போகஸ் ஆகிப்போனது. அனுபவி ராஜா அனுபவி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களெல்லாம் ஹீரோவுக்காக உருவாகி, காமெடியன் நாகேசின் வசம் முழுமையாக சிக்கியவை.




1962-ஆம் ஆண்டில் எடுத்த வேகம், 1970கள் துவக்கம்வரை அப்படியொரு ஜெட் வேகத்திற்கு இணையானது. கதாநாயகனாகவும் நடித்தார். கதாநாயகன்களை தூக்கிவிடவும் நடித்தார். சித்தி, பூவா தலையா போன்ற படங்களெல்லாம் அந்த ரகம்தான். இன்னொரு முக்கியமான விஷயம், நாகேஷ் மனோரமா ஜோடி என்றால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும். டைரக்டர், தயாரிப்பாளர்களை தாண்டி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களே, நாகேஷ்-மனோரமா ஜோடி உண்டா என்று கேட்கும் அளவுக்கு வர்த்தக நிலைமைபோனது.


காமெடி என வரும்போது, உடன் நடித்த எம்ஆர் ராதா, தங்கவேலு, விகே ராமசாமி போன்ற ஜாம்பவான்களோடு இரண்டறக்கலந்து ஒட்டுமொத்த சீனுமே அற்புதமாக வரவழைக்கும் நாகேசின் தனித்திறமை, படம் பார்க்கும்போதுமட்டுமே தெரியும், புரியும். துரதிஷ்டவசமாக எம்ஜிஆர் மற்றும் மனோரமாவுடன் ஒரே நேரத்தில் உரசல் வர, நாகேஷின் நிலைமை பின்னடைவை சந்தித்தது. எம்ஜிஆருக்கு அஞ்சி, படத்தயாரிப்பாளர்கள் நாகேஷுக்கு வாய்ப்பு தருவதை தவிர்த்தனர். எம்ஜிஆரின் படங்களில் நாகேஷ் இடத்தை சோ நிரப்ப ஆரம்பித்தார். ஒருவழியாக உரசல் முடிவுக்கு வந்தது. மறுபடியும் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் என எம்ஜிஆரின் பிளாக் பஸ்டர் படங்களில் நாகேஷின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்தது.


கே.பியைபோல இந்த காமெடி ராட்சசனுக்கு பின்னாளில் சரியாக தீனிபோட்டவர் கமல்ஹாசன் மட்டுமே. அதுவும் விதவிதமாய்.. அபூர்வ சகோதர்களில் அப்படியொரு வில்லனாய் நாகேஷ் துவம்சம் என்று நாமெல்லாம் நினைத்துப்பார்த்திருப்போமா?




இந்திரன் சந்திரன் படத்தில் சதாசபலத்தோடு அலையும் அமைச்சர், மைக்கேல் மதன காமராசனில் பிராடு மேனேஜர் அவினாசி, அவ்வை சண்முகியில் குடிகார மேக்கப்மேன் ஜோசப், பிணமாகவே நடித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மகளிர் மட்டும்… இப்படி வரிசையாய் அசத்தியவருக்கு கடைசி படம் கமலின் தசாவதாரம்தான். செல்லப்பா, ராமய்யா, சுந்தரம், தருமி, மாடிப்படி மாது, வைத்தி. அவினாசி போன்ற பாத்திரங்கள் இன்றைக்கு பார்க்க நேர்ந்தாலும் புதுப்புது விஷயங்கள் தென்படும்.. அவ்வளவு நுணுக்கங்கள் இன்றளவும் அவற்றில் கொட்டிக்கிடக்கும்.


இப்படிப்பட்ட கலைஞனை மத்திய அரசு விருது விஷயத்தில் கண்டுகொள்ளவேயில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 


மாபெரும் கலைஞன், நாகேஷின் 88 வது பிறந்தநாள் இன்று..