தன் மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இடையிலான விவாகரத்து குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்களைக் கண்டித்து பதிவிட்டுள்ளார் நடிகர் நாகார்ஜுனா. தன் மகனின் விவாகரத்து குறித்து எந்த நேர்காணலும் தரவில்லை என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
`சமூக வலைத்தளங்களிலும், டிஜிட்டல் செய்தி தளங்களிலும் நான் சமந்தா, நாக சைதன்யா குறித்து பேசியதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதும், முட்டாள்தனமானதும் ஆகும். ஊடகத்தில் பணியாற்றும் நண்பர்கள் இதுபோன்ற வதந்திகளை செய்திகள் என வெளியிடுவதைத் தவிர்க்கவும்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் நாகார்ஜுனா.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல், இணையத்தில் பல்வேறு தளங்களில் நாகார்ஜுனா நேர்காணல் அளித்ததாகவும், அதில் சமந்தாதான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும் கூறியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு புத்தாண்டு வரை தம்பதியினர் இருவரிடையே எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், இருவரும் ஒன்றாகப் புத்தாண்டு கொண்டாடியதாகவும் நாகார்ஜுனா கூறியதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தங்கள் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறுவதாக நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் அறிவித்தனர். `சுமார் பத்தாண்டுகளாக நட்போடு பழகும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இருந்தது. எங்கள் உறவின் மையப்புள்ளியான எங்கள் நட்பு எங்களுக்குள் எப்போதும் சிறந்த உறவைப் பாதுகாக்கும் என நம்புகிறோம்’ என இருவரும் குறிப்பிட்டதோடு, தங்களின் கடினமான அந்த நேரத்தில் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, நாகார்ஜுனா இருவரின் எதிர்காலத்தையும் வாழ்த்தி தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், இருவரின் பிரிவு துரதிருஷ்டமானது எனவும், சமந்தாவுடனான தங்கள் தருணங்களை அவரது குடும்பம் எப்போதும் மனதில் கொள்ளும் எனவும் கூறியிருந்தார். மேலும், தங்கள் பிரிவில் இருந்து இருவரு விரைவில் மீள பலம் பெறுமாறும் அவர் வாழ்த்தியிருந்தார்.
சமீபத்தில் `புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார் சமந்தா. நாகார்ஜுனாவும், நாக சைதன்யாவும் சமீபத்தில் `பங்காரராஜு’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.