நடிகர் ரஜினிகாந்த் பற்றி நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேசியுள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. ரஜினியின் எளிமை, சக நடிகர்களை அவர் நடத்தும் விதம் பற்றி முத்துக்காளை சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியுள்ளார். 23 ஆம் புலிகேசி படத்தில் ரஜினி தன்னுடைய நடிப்பை பாராட்டியதாக அவர் கூறியுள்ளார்.
சினிமா கனவில் படிப்பைவிட்டு சென்னை வந்தவர் நடிகர் முத்துக்காளை. கார்பெண்டர் , ஸ்டண்ட் கலைஞர் என பணியாற்றி வந்த இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் வழியாக ஒரு பிரபல நடிகராக வளர்ந்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் பல ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் முத்துக்காளை நடிகர் ரஜினியுடன் தனது அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார்.
ரஜினியை பார்த்த அனுபவம்
ரஜினியை முதல் முறையாக சந்தித்த அனுபவத்தைப் பற்றி பேசுகையில். " தர்மத்தின் தலைவன் படத்தின் படப்பிடிப்பில் நான் கார்பெண்டராக வேலை பார்த்தேன். ரஜினியை மிக நெருக்கமாக பார்த்தேன். சந்திரமுகி படத்தில் எனக்கு ஒரு காட்சி இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் சுமார் ஆயிரம் பேர் இருந்தோம். ஷாட் முடிந்ததும் அவர் என்னைப் பார்த்து கை காட்டினார். அவரே எழுந்து வந்து என் கைகளை பிடித்து நல்லா வருவீங்க என்று சொல்லிவிட்டு போனார் . " என முத்துக்காளை கூறியுள்ளார்.
புலிகேசி பட காட்சி
"நான் சிவாஜி படத்தில் நடிக்க காரணமாக அமைந்தது. அந்த படத்தின் காட்சியில் ரஜினி என்னை கூப்பிட்டதும் நான் சுற்றி இருக்கும் நாற்காலிகளை தாவி வரவேண்டும் . ரஜினி விவேகிடம் அவர் எப்படி வரப்போகிறார் என்று கேட்டார் . ஷாட்டில் ரஜினி கூப்பிட்டதும் நான் பறந்து பறந்து வந்தேன். புலிகேசி படத்தில் நான் நடித்த காட்சி நன்றாக இருந்தது என்று ரஜினி சொன்னார். அதன்பிறகு ரஜினியுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் சுற்றி ஒரு ஆயிரம் பேர் இருந்தாலும் ஒருத்தரை தேடி வந்து கை கொடுத்து போகிற இயல்புடன் இருப்பதால் தான் இன்றும் அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். " என முத்துக்காளை கூறியுள்ளார்.