MS Bhaskar: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 71 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். அதாவது, இந்த விருது பார்க்கிங் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியற்காக வழங்கப்பட்டது. அந்தவகையில் இந்திய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் தமிழர்களின் பாரம்பரிய விருதான வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லவேண்டும்.
கேப்டன் ஆலயத்தில் மரியாதை:
இந்த நிலையில் தான் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை சென்னை கோயாம்பேட்டில் அமைந்துள்ள புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடமான ‘கேப்டன் ஆலயத்தில்’வைத்து மரியாதை செலுத்தியுள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். பின்னர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”பார்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் திரு .MS.பாஸ்கர் அவர்கள் கேப்டன் ஆலயத்தில் தெய்வதிரு கேப்டன் அவர்களை வணங்கி மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்தார்.”என்று கூறியுள்ளார். முன்னதாக பல பேட்டிகளில் கேப்டன் குறித்து உணர்வுப்பூர்வமாக எம்.எஸ்.பாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.