'குரு என் ஆளு' படத்தில் சிவாஜி மாடுலேஷனில் நான் நடித்ததற்காக பிரபு என்னிடம் போன் செய்து கேட்டார் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்களிடையே அறிமுகமாகி, இன்று தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். சின்னத்திரையில் இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா” சீரியலில் ஏற்று நடித்த பட்டாபி என்னும் கேரக்டர் பெயரால் ரசிகர்களிடம் இன்றும் பிரபலமாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மாதவன், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த எம்.எஸ். பாஸ்கர், 'குரு என் ஆளு' படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார். மாதவன் நடித்த இந்த படத்தில் விவேக் பெண் வேடம் போட்டு எம்.எஸ்.பாஸ்கரை ஏமாற்றும் காட்சிகள் இடம் பெறும்.
இதில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம் சிவாஜியையும், விவேக் பேசும் வசனம் சரோஜா தேவியையும் நியாகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த காட்சிக்கும் பிரபு கோபப்பட்டார் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது, 'ஒரு நாள் பிரபு எனக்கு போன் பண்ணி அப்பாவை கிண்டல் பண்ண மாதிரி நடிச்சிருக்கியாமே?' என கேட்டார். உடனே 'அந்த கேரக்டரை நான் பண்ணவில்லை என சொன்னால் இன்னொருவர் செய்வார். ஓவராக நடிப்பார் அதுதான் எங்க அப்பாவை (சிவாஜி) கிண்டல் பண்றது. ஏன் அப்பாவின் வசனங்களை நீங்கள் பேசி நடிச்சது இல்லையா?' என நான் கேட்டேன்.
எதில் என பிரபு என்னிடம் கேட்க, ’பட்ஜெட் பத்மநாபன் படத்தில் நீங்களும் விவேக்கும் திருவிளையாடல் பட காட்சியை உருமாற்றம் செய்து நடித்திருப்பீர்கள். அப்ப நான் சிவாஜியோட கேரக்டரை ஏற்று நடிக்கக்கூடாதா?. அந்த படத்தில் நாங்கள் காமெடியாகவே படமாக்கினோம். அதனாலே நீங்க என்னிடம் அப்பா கேரக்டரை ஏற்று நடிக்காதீங்க என சொல்லாதீங்க!’ என பிரபுவிடம் சொல்லிவிட்டேன்.
’நான் ஒன்னும் சொல்லல. நீ என்ன இவ்வளவு கோபப்படுற?’ என என்னிடம் பிரபு கேட்டார். ’ஆன்மாவாக இருந்து சிவாஜி என்னை திட்டி விடுவாரோ என பயந்து பயந்து நடித்தேன்’ என அந்த நேர்காணலில் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.