நடிகர் மோகன் ஜொமேட்டோவில்  டெலிவரி ஊழியர் உடையணிந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


80களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்த மோகன் ஹிட் பாடல்களால் தனக்கு என தனி ரசிகர்களை பட்டாளத்தை வைத்திருந்தார். அவரது பாடல்களை முனுமுனுக்காத ரசிகர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ரசிகர்களால் செல்லமான மைக் மோகன் என அழைக்கப்பட்ட மோகன், பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 


அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மோகன், வாய் திறக்காமல் மவுனம் காத்தார். நீண்ட நாட்களுக்கு மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ள மோகன், ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஸ்ரீ இயக்கும் ஹரா படத்தில், குஷ்பு, வனிதா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 


இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வனிதா பகிர்ந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. வனிதாவுடன் நிற்கும் மோகன் உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்துள்ளார். மோகனின் புகைப்படத்தை பகிர்ந்த வனிதா, தனது நீண்ட நாள் கனவு நனவாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.


அதை பார்த்த நெட்டிசன்ஸ், மோகன் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அது திரைப்படத்தில் நடிக்கும் காட்சி என கூறப்படுகிறது. 






ஹரா படம் திரைக்கு வந்தால், கேரக்டர் என்ன என தெரிந்துவிடும். நீண்ட நாட்களுக்கு பிறகு மோகனை திரையில் காண அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.