நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் ஷர்மா சின்னத்திரையில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இயக்குநராகவும் எழுத்தாளராகவும் இருந்துள்ள இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடித்த படங்கள்
ஏணிப்படிகள் உள்ளிட்ட 80களின் பிரபல திரைப்படங்கள் தொடங்கி, கண்ணெதிரே தோன்றினாள், உயிரோடு உயிராக, சுயம்வரம், ப்ரெண்ட்ஸ், அப்பு, தோஸ்த், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, சச்சின், பார்த்திபன் கனவு, தவம், ராஜ்ஜியம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் மோகன் ஷர்மா.
அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் ரோட்டில் தனது குடும்பத்துடன் வசதி வருகிறார். நேற்று இரவு தி. நகரில் இருந்து தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டு இருக்கையில் ஹாரிங்டன் ரோடு 10வது அவென்யூ அருகே வரும் போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து நடிகர் மோகன் ஷர்மாவை காரை விட்டு கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மோகன் ஷர்மாவின் கண்களிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனே அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலால் மூக்கில் கட்டுபோடப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. காயங்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
முன்விரோதம் :
மோகன் ஷர்மா தன்னை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மோகன் ஷர்மாவுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே இருக்கும் முன்விரோதம் தான் இந்தத் தாக்குதலுக்கான காரணமாக சொல்லப்படுகிறது.
மோகன் ஷர்மாவுக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் ஒன்று போயஸ் கார்டனில் இருந்துள்ளது. அதைக் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இடைத்தரகர்களான சேகரன் மற்றும் அவரது மகன் கிருஷ்ணகுமார் என இருவரின் மூலம் தான் வீடு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் வீட்டை விற்ற நாள் முதல் இடைத்தரகர்கள் இருவரும் வீட்டுக்குள் அத்துமீறி வசித்து வருகிறார்கள். இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் செய்துள்ளார் மோகன் ஷர்மா. அந்த முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலுக்கும் இந்த முன்விரோதம் தான் காரணம் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுளது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றி அதை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.