தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக உலா வந்தவர் சில்க் ஸ்மிதா. இவரைப் பற்றி பிரபல நடிகர் மோகன் ஒரு முறை நேர்காணலில் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் மோகன் கூறியிருப்பதாவது,
நடிப்புக்கும், குணத்திற்கும் சம்பந்தம் இல்லை:
"சில்க் ஸ்மிதா ஒரு நல்ல மனிதர். ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சு வந்தவர். திரையுலகிற்கு வந்தபோதே அவர் கஷ்டத்தை அனுபவித்துதான் வந்திருந்தார். ரொம்ப பாவம். மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் அவருக்கு அந்த வலி தெரியும். மிக மிக அற்புதமான மனிதர்.
அவர்கள் நடித்த கதாபாத்திரத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவர் வேலை செய்வதற்கு மிகவும் இலகுவானவர். அதைவிட பழகுவதற்கு மிகவும் நல்லவர். பேசுற விதமும் அப்படித்தான். அனைத்துமே அவ்வளவு எளிமையாக இருக்கும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சிறந்த ஆன்மா:
சில்க் ஸ்மிதா ஷுட்டிங் என்றாலே அதைப்பார்க்கவே அத்தனை பேர் வருவார்கள். விநியோகஸ்தர்கள் முதல் வந்து பார்ப்பார்கள். அந்தளவுக்கு சில்க் ஸ்மித் என்றால் அவ்வளவு செல்வாக்கு. அவங்க எப்போதும் மிகவும் எளிமையாகத்தான் பழகிக்கொண்டு இருந்தார்கள். அந்த வகையில், நாங்கள் மிகவும் சிறந்த ஆன்மாவை இழந்துவிட்டோம். அவங்களை இழந்ததில் எனக்கும் வருத்தம் உள்ளது."
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
சில்க் ஸ்மிதா:
சில்க் ஸ்மிதா கடந்த 1996ம் ஆண்டு தனது 35 வயதிலே உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ்நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினி, கமல், மோகன், பிரபு என தமிழ் சினிமாவின் அனைத்து உச்சநட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தற்போது வரை ஒரு தகவல் உலாவிக் கொண்டே உள்ளது. மோகனுடன் இணைந்து நிரபராதி, லாட்டரி டிக்கெட் ஆகிய படங்களில் சில்க் ஸ்மிதா இணைந்து நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா கடந்த 1979ம் ஆண்டு ஒரு மலையாள படம் மூலமாக அறிமுகமானார். தமிழில் முதன்முதலில் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால், அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயர் உருவாகியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் பெரும்பாலான படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்தாலும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது.