தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று நடந்த விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

Continues below advertisement

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

ஒன்றிய அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக விபிஜிராம்ஜி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு, ஊரக பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடல் உழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். 

Continues below advertisement

இதில், 85 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புதியதாக அறிமுகப்படுத்தப்படும் விபிஜிராம்ஜி அறிமுக நிலையிலே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக குரல் எழுப்பியுள்ளது. எனினும், மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. 

நிதி ஒதுக்கீடு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைச் சட்டம் 2005ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கு ஏற்பவும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பெரும்பான்மையாக பலன் அடைந்து வந்த பெண்கள் மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூக பாதுகாப்பை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்கு குறையாமல் ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

உத்தேச மதிப்பீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு, தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்பதற்கான தற்போதைய புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டும் எனவும், மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை வேலைக்கான தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் நடைமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். 

நிதிச்சுமை உயர்வு:

இந்த புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்படுகையில், மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக உயர்த்துவதாக உள்ளது. புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் நிதிப்பங்களிப்பைப் போலவே விடுவிக்கப்பட வேண்டும். 

பெயர் மாற்றம்:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களை கொண்டு இந்த திட்டத்திற்கு விபிஜிராம்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு அளித்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதைகளையும் எப்போதும் நினைவு கூறும் வகையில்,  இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலே தொடர வேண்டும் என இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.