மோகன்
மைக் மோகன் என்று பிரபலமாக ரசிகர்களால் அறியப் படுபவர் நடிகர் மோகன். பாலுமகேந்திரா இயக்கிய கன்னட படம் கோகிலாவில் நடிகராக அறிமுகமானார். பின் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய மூடு பனி படத்தில் நடித்தார். தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே, துரை இயக்கிய கிளிஞ்சல்கள் என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்தார். மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் தொடங்கி கோபுரங்கள் சாய்வதில்லை, பயணங்கள் முடிவதில்லை , ரெட்டை வாள் குருவி என மோகனின் கரியரில் பல முக்கிய படங்களைக் குறிப்பிடலாம்
மோகன் மைக் மோகனான பின்னணி
பெரும்பாலான தமிழ் ரசிகர்களிடம் இன்று மைக் மோகனாக அறியப்படுகிறார் மோகன். அன்றைய சூழலில் மோகன் நடித்த படங்களின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்தப் பாடல்களை தான் பாடவில்லை என்றாலும் பாடலுக்கு மோகன் கொடுக்கும் உதட்டசைவுகள் , முகபாவனைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் ஒரு சில படங்களில் அவர் பாடகராகவும் நடித்தது என பல காரணிகள் சேர்ந்து பத்திரிகையாளர் அவருக்கு மைக் மோகன் என்று பட்டத்தை கொடுத்தார்கள். இந்த பெயர் நாளடைவில் மக்களிடம் ஆழமாக பதிந்து மைக் மோகன் என்கிற பெயர் பிரபலமானது.
மோகனை முதலில் டப்பிங் பேச வைத்த கலைஞர் கருணாநிதி
மோகனின் பாடல்கள் மட்டுமில்லாமல் மோகனின் குரலும் ரசிகர்களை கவர்ந்த அம்சங்களில் ஒன்று. இயக்குநர் துரை இயக்கத்தில் மோகன் நடித்த கிளிஞ்சல்கள் படத்தில் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தார் எஸ்.என் சுரேந்தர். இதனைத் தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு சுரேந்தர் பின்னணி குரல் கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் சில்வர் ஜூப்லி கொண்டாடிய படங்களாக அமைந்தன. இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ந்து மோகன் படம் என்றாலே எஸ்.என் சுரேந்தர் தான் குரல் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தை ஏற்பட்டுவிட்டது. மோகன் நடித்த 75 படங்களுக்கு எஸ்.என் சுரேந்திரன் தான் குரல் கொடுத்திருக்கிறார். இந்த வெற்றி ஃபார்முலாவை முதல் முதலில் மாற்றிக் காட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தான் என்கிற சுவாரஸ்ய தகவலை நடிகர் மோகன் சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1988 ஆம் ஆண்டு கொச்சின் ஹனிஃபா இயக்கத்தில் மோகன் நடித்த படம் பாசப் பறவைகள். இந்தப் படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தின் போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சாரகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்திற்கான டப்பிங் வேலைகள் தொடங்க இருந்த போது எஸ்.என் சுரேந்தரை டப்பிங் கொடுக்க அழைக்கும் தருணத்தில் மோகனிடம் கருணாநிதி “ ஏன் நீங்க பேச மாட்டீங்களா” என்று கேட்டுள்ளார். வாய்ப்பு கொடுத்தால் நான் பேசுகிறேன் என்று மோகன் பதிலளிக்க “ இந்த படத்தில் நீங்களே டப்பிங் பேசிடுங்க “ என்று கருணாநிதி கூறியுள்ளார். அதுவரை தமிழில் 70 படங்கள் வரை நடித்திருந்த மோகன் முதல் முதலாக தனது சொந்த குரலில் பேசிய படம் பாசப் பறவைகள்தான்.