ஹரா
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 80களின் பிரபல நடிகர் மோகன் நடித்துள்ள படம் ஹரா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் நடிப்பில் ஹரா படம் கடந்த ஜூன் 7ஆம் தேதி நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தில் அனுமோல், யோகிபாபு, கவுஷிக், அனித்ரா நாயர் மொட்ட ராஜேந்திரன், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜய் குமார், மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி, வனிதா விஜய் குமார், விஜய் டிவி தீபா, மனோ பாலா, விஎஸ்ஜி, சோந்த்ஷ் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கம்பேக் கொடுத்தாரா மோகன்
சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மோகனின் ஹரா திரைப்படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஹரா படம் மோகனின் கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிபார்த்து வந்த நிலையில் ஹரா படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். சுமாரான கதைத் தேர்வு, சொதப்பலான திரைக்கதை என படத்தில் எக்கச்சக்கமான நெகட்டிவ் அமசங்களை படம் பார்த்த ரசிகர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் ஹரா படத்தில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரா படத்தின் கதை
கோயம்புத்தூரில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளின் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேடிச் செல்கிறார் மோகன். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பணத்துக்காக தனியார் போலி மாத்திரை நிறுவனங்களை ஆதரிப்பது, கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு அவர்களைப் பழிவாங்குகிறார் மோகன்.
ஹரா பாக்ஸ் ஆஃபிஸ்
ஹரா படம் முதல் நாளில் ரூ.50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மற்றொரு பிரபல 80ஸ் நடிகர் ராமராஜன் நடித்து வெளியான சாமானியன் படம் முதல் நாளில் ரூ.25 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. திரையரங்கில் ஓடிய மொத்த நாட்களில் சாமானியன் படம் ஒரு கோடி வசூலை கூட எட்டவில்லை என்று சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ராமராஜன் படத்தைக் காட்டிலும் மோகன் நடித்துள்ள ஹரா படத்திற்கு ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பு இருந்துள்ளதை முதல் நாள் வசூலை வைத்து யூகிக்க முடிகிறது. அதே நேரம் அடுத்து வரக்கூடிய இரண்டு விடுமுறை நாட்களில் ஹரா படம் சாமானியன் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.