பாடல்களுக்காகவே சினிமாவில் ஒரு நாயகன் ஹிட் ஆக முடியுமென்றால் அது நடிகர் மோகனால் மட்டும்தான் முடியும்.அதற்காகவே மைக் மோகன் என அறியப்பட்டவர். இவர் படங்களில் அத்தனைப் பாடல்களுமே உத்திரவாதமாக ஹிட் அடித்த காலம் உண்டு.மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்றும் மைக் மோகன் என்றும் பெயர் வந்தது.


உதயகீதம்,இதயகோயில், கோபுரங்கள் சாய்வதில்லை, தென்றலே என்னைத் தொடு,இளமைக் காலங்கள்,விதி, ஓசை, நூறாவது நாள் என மோகனின் திரை வாழ்க்கை சூப்பர் ஹிட் படங்களுடன் தொடங்கியது. அத்தனையும் வெள்ளிவிழாத் திரைப்படங்கள்.1984-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மொத்தம் 19 திரைப்படங்கள் வெளியாகின.


 மோகன் இரண்டாவது இன்னிங்ஸாக தமிழ் சினிமாவில் எண்ட்ரியான போது அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் இருந்து... 


 



”ஒருநாளைக்கு 20 மணிநேரம் வொர்க் செய்திருக்கேன். எனக்கே ப்ரேக் தேவைப்பட்டுச்சு. அந்தக் காலக்கட்டத்துலதான் எனக்கு திருமணமும் நிகழ்ந்தது,அது முடித்து குடும்ப வாழ்க்கைனு ஒதுங்கிட்டேன். தற்போது எனது இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் தொடங்கியிருக்கேன்.நான் நூறு ஹிட் படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அது எனக்கு ஈஸியாக அமையவில்லை. முதல் படம் கன்னடத்தில் கோகிலா. பாலு மகேந்திரா சார் இயக்கத்தில் நடித்தேன். எடுத்த உடனேயே ஒரு பெரிய நடிகர் அறிமுகத்தில் நடித்ததால சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு ப்லவேறு மொழிகளில் கிடைச்சது. நிறைய நடிக்க ஆரம்பிச்சேன். என்னுடைய படங்களில் பாடல்கள் அத்தனையுமே ஹிட்டாக அமைந்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லனும். நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் பாடகனாக நடித்த படங்கள்தான் அதிகம் கவனிக்கப்பட்டது. அந்த வகையில் எனக்கு கிடைச்சப் படங்கள், என்னைச் சுற்றி இருந்த நன்பர்கள் என எல்லோருமே எனக்கு ரொம்ப நல்லவர்களா வாய்ச்சாங்க. அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்கேன்னுதான் சொல்லனும். இதுதவிர சினிமாவில் நல்ல உயரத்தில் இருந்தாலே நம்மைப் பற்றி எழும் வதந்திகள் சகஜம். என்னைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே வந்ததுனு சொல்லலாம்.


எனக்கு எய்ட்ஸ் இருக்கு, நான் இறந்துட்டேனு வந்த செய்திகள் எல்லாம் அதிகபட்சமாகவே என்னை பாதித்தது. ஆனால் என் ரசிகர்கள், என் பார்ட்னர் என எல்லோரும் எனக்கு உறுதுணையா இருந்தாங்கனுதான் சொல்லனும். அவங்க உதவியால்தான் இப்படியான் வதந்திகளில் இருந்து மீண்டு வந்தேன். எனக்கு இன்றைக்கு வரை சிகரேட், மது பழக்கம் கிடையாது, யோகா தவறாம செய்யறேன்.அதுதான் என்னை ஆரோக்கியமா வைத்திருக்குனு நினைக்கறேன்.” என்றார். 


மேலும் பெண்களுக்கு எது அழகு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மனசுதான் ஆண் பெண் வித்தியாசம் இல்லாம எல்லோருக்கும் அழகு" எனச் சொல்லி முடித்தார்.