எம்.ஜி.ஆர்.  நடிப்பில் வெளியாகி, அவரது அரசியல் பயணத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்ந்த ‘இதயக்கனி’ படம் இன்றோடு 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


சினிமா என்னும் சக்ஸஸ் ஃபார்முலா


லாபம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி சினிமா நினைத்தால் மக்களிடத்தில் ஒருவரின் இமேஜை உயர்த்தவும் செய்யும், கீழிறக்கவும் செய்யும். உயர்த்தப்படும்போது அதனால் கிடைக்கும் பலன் என்பது எந்த எல்லைக்கும் நம்மை கொண்டு சேர்க்கும். அப்படி ஒரு ஃபார்முலாவை தமிழ் சினிமாவில் உருவாக்கி கொடுத்த பெருமை எம்.ஜி.ஆர் அவர்களை மட்டுமே சேரும். எந்த சினிமா மூலம் மக்களிடத்தில் தன்னை அடையாளப்படுத்தினாரோ, அதே சினிமா வாயிலாக அதிமுகவை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார்.  அதற்கு வித்திட்ட படங்களில் ஒன்று ‘இதயக்கனி’. 


மக்கள் கொடுத்த வெற்றிக்கனி


சத்யா மூவீஸ் தயாரிப்பில் ‘இதயக்கனி’ படம் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், 
 தேங்காய் சீனிவாசன், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏகப்பட்ட  நட்சத்திரங்கள் இதயக்கனி படத்தில் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்தார். 


படத்தின் கதை 


தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் எஸ்டேட் முதலாளி மோகன், யாரும் இல்லாத ஒரு பெண்ணை காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். ஊர் இவர்களை ஒரு மாதிரியாக பேச, அப்பெண்ணை திருமணமும் செய்கிறார். இதனிடையே பெங்களூருவில் நடந்த ஒரு கொலைவழக்கு மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்போது தான் படத்தின் ட்விஸ்ட் தொடங்கும். விசாரணை நடத்தியதில் இந்த கொலையை செய்தது மோகனின் மனைவி என தெரிய வரும் (அடுத்த ட்விஸ்ட்). பெங்களூரு சென்று தன் மனைவி உள்ளிட்ட அந்த கூட்டத்தை கைது செய்து, தன் மனைவி குற்றவாளி அல்ல என்ற உண்மையை நிரூபிக்கிறார். இதுவே இதயக்கனி படத்தின் கதை



 அதிமுகவை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த எம்ஜிஆர்


1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்படுகிறது. எம்ஜிஆர் 1977 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆகிறார். 1975ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். இந்த படத்தில் பாடல்கள், வசனம், காட்சிகள் என அனைத்திலும் அதிமுகவை புகுத்தி மக்களிடத்தில் பதிய செய்தார். அறிஞர் அண்ணாவின் ஓவியம், பின்னணியில் அண்ணாவின் குரல் என ஆரம்பமே ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கும். 


டைட்டில் முடிந்ததும் பாட்டு, ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' பாட்டு ஓடும். எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல் தான் என்றாலும் இன்றளவும் அதிமுகவின்  அரசியல் கூட்டங்களில் தவறாமல் ஒலிக்கிறது. மேலும் ‘இன்பமே உந்தன் பேர் பெண்மையோ’ பாடல் பலரின் ஆல்டைம் பேவரைட் ஆக இன்றும் உள்ளது. 


 அதேபோல் படத்தில் ஒரு இடத்தில் ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என அதிமுகவை வசனங்கள் வாயிலாக புகுத்தியிருப்பார்கள். எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க இரட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க, தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ் என எம்ஜிஆர் சுற்றியே வசனங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த படம் வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், தமிழின் சிறந்த ஸ்பை த்ரில்லர் படங்களின் வரிசையில் இந்த படம் அந்த காலக்கட்டத்திலேயே இடம் பெற்றிருந்தது.