மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இருந்து ஏராளமான விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாக நடிகரும், தேமுதிக நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தொடங்கி உடல் அடக்கம் செய்யப்படுவது வரை அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகரும், தேமுதிக நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன் தான். அவர் ஒரு நேர்காணலில் கேப்டன் விஜயகாந்தை தான் கடைசியாக பார்த்ததும், அப்போது நடந்த நிகழ்வையும் பற்றியும் பேசியுள்ளார். 


அதில், “நான் கடைசியாக கேப்டன் விஜயகாந்தை அக்டோபர் 2 ஆம் தேதி பார்த்தேன். என்னுடைய மகன் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக செல்ல உள்ள நிலையில், அவன் தான் கேப்டனை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க ஆசைப்படுவதாக கூறினான். நான், அவருக்கு உடல்நிலை சரியில்லை. யாரையும் பார்க்க அனுமதி இல்லை. தொற்று ஏற்பட்டுவிடும் என சொன்னேன். ஆனால் அவன் இல்லை, நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சொல்லிட்டான். 


என் பையன் எம்பிபிஎஸ் படிக்க ரஷ்யா சென்றான். அங்க போறதுக்கு முன்னாடி விஜயகாந்திடம் ஆசீர்வாதம் பெற்றான். அப்போது அவர், ‘நீ எங்கே வேண்டுமானாலும் போய் படி. ஆனால் தமிழ்நாட்டில் தான் மருத்துவ சேவை செய்ய வேண்டும். முக்கியமாக ஏழை மக்கள் பணம் இல்லாமல் வந்தாலும் மருத்துவம் பார்க்க வேண்டும்’ என அட்வைஸ் செய்தார். இதனையடுத்து நான் பிரேமலதாவிடம் அப்பாயின்மெண்ட் கேட்கிறேன். அவர், யாரையும் பார்க்க அனுமதிக்கிறது இல்லை. நீங்க படிப்பு விஷயம் வேற சொல்றீங்கன்னு சொல்லிட்டு என்னிடம் ஒருநாள் டைம் கேட்டார். அதன்பிறகு அக்டோபர் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு குடும்பத்துடன் சென்று விஜயகாந்தை பார்த்தேன். அவருக்கு பேச்சு வராத நிலையில் என் பையன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார். மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சென்ட் பாட்டிலை பரிசளித்தார். 


பிரேமலாதா அண்ணியார் என் பையனுக்கு விபூதி பூசி ஆசீர்வாதம் பண்ணுனார். அதன்பிறகு நான் விஜயகாந்தை பார்க்கவில்லை. இதற்கிடையில் எம்ஜிஆர் நினைவு நாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க பிரேமலதா வந்திருந்தார். அப்போது நடிகர் போண்டா மணி இறந்தது பற்றி சொன்னேன். உடனடியாக விஜய பிரபாகரனுக்கு போன் செய்து கேப்டனிடம் ஏதாவது செய்ய வேண்டுமா என கேட்க சொன்னார்.


பின்னர் உடனடியாக மேனேஜரிடம் சொல்லி ஒரு கவர் ஒன்றை கொடுத்தார்கள். அதில் என்ன தொகை இருந்தது எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் உடல்நிலை சரியில்லாதபோதும் கூட அவர் உதவி செய்தது பெரிய விஷயம் தான். எதிரிக்கு கூட கஷ்டம் வந்த உதவ வேண்டும் என்பது கேப்டனின் குணம். அவரிடம் இருந்து மனித நேயம், தர்மம், தைரியம், எப்படி பழக வேண்டும், மரியாதை தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை நான் நிறைய கற்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.