நடிகர் தனுஷின் படிக்காதவன் படத்தில்  இருந்து வடிவேலு ஏன் விலகினார் என்பது தொடர்பாக நடிகர் மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சுராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் படிக்காதவன். மணிசர்மா இசையமைத்து இருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகை தமன்னா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் இடம் பெற்றிருந்த நடிகர் விவேக்கின் நகைச்சுவை இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. 


ஆனால் இந்த கேரக்டரில் முதலில் பிரபல நடிகர் வடிவேலு தான் நடிக்கவிருந்தார். தலைநகரம், மருதமலை போன்ற படங்களில் சுராஜூடன் பணியாற்றிய வடிவேலுவை படிக்காதவன் படத்திற்காக சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் திடீரென வடிவேலு படத்தில் இருந்து விலக விவேக் நடித்தார்.  இந்த படத்தில் நடிகர் மீசை ராஜேந்திரனும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அவர் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  படிக்காதவன் படத்தில்  இருந்து வடிவேலு ஏன் விலகினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். 




அதில் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. முதல் காட்சியில் நான் வடிவேலுவை அடிப்பது போலவும் அதனை தனுஷூம், அவரது நண்பரும் பார்ப்பது போலவும் சீன் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் படப்பிடிப்புக்கு காலை ஆஜரான நிலையில் லேட்டாக வந்த வடிவேலு சுராஜிடம் என்ன சீன் என கேட்டார். அவரும் அதனை விளக்க யார் என்னை அடிக்கப்போவது என கேள்வியெழுப்பினார். இயக்குநர் என்னைக் காட்ட முதலில் என்னை வேண்டாம் என வடிவேலு கூறிவிட்டார். 


சென்னை என்றால் வேறு ஆளை ஏற்பாடு செய்யலாம். இங்கே எப்படி என சுராஜ் கேட்க சிறிது நேரத்திற்குப் பின் வடிவேலு ஒப்புக் கொண்டார். அடுத்ததாக வடிவேலும், தனுஷூம் நேருக்கு நேர் பேசிக் கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் தனுஷ் முகத்தை பார்க்காமல் வடிவேலு திரும்பியதால் கிட்டதட்ட 8 டேக்குகள் போனது. உடனே கேமராமேன் லைட்டிங் செட் செய்த சமயம் சுராஜ் மைக்கில் சீக்கிரம் லைட் செட் பண்ணுங்க..அண்ணனுக்கு (வடிவேலு)  நிமிஷத்துக்கு நிமிஷம் ரேட் ஏறும் என கூற வடிவேலு அவரைப் பார்த்து முறைத்தார்.


அதன்பின் 14 டேக்குகள் போன நிலையில் தனுஷ் வடிவேலுவிடம் இயக்குநர் சொன்ன மாதிரி பண்ணுங்க என தெரிவிக்க வடிவேலு அவரை ஒரு முறைப்பு முறைத்தார். பின்னர் ஹோட்டல் ரூமில் இதுகுறித்து பேசியதாகவும், அப்போது வடிவேலு சந்திரமுகி படத்தில் அவரது மாமனாருக்கே (ரஜினி) நான் தான் சொல்லிக் கொடுத்தேன். இவரு என்ன சொல்றாரு என சொன்னதாக நான் கேள்விப்பட்டேன் என மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


மறுநாள் வில்லன் நடிகர் சுமனை வடிவேலு சந்திக்கும் காட்சிகளும், அவரது காலை அமுக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருந்தது. ஆனால் நான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய காமெடி நடிகர். அவரது காலை நான் பிடித்தால் என்னாவது என கூறியுள்ளார். அதன்பின் படப்பிடிப்பில் இருந்து உடல் நலக்குறைவு என கிளம்பியவர் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் திரும்பி விட்டார். இதனால் படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்து விட்டோம்.அதன் பின்னர் தான் விவேக் இப்படத்தில் இணைந்தார் என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண