Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் தான் தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். வெள்ளித்திரை தொடங்கி சின்னத்திரை வரை, மாரி செல்வராஜ் குறித்த உரையாடல்கள் நடைபெற்று வருகின்றது. அதேபோல், அரசியல் வட்டாரத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் புயலைக் கிளப்பியுள்ளது.


இந்நிலையில், கலைஞர் டி.வி.யில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும், ”வா தமிழா வா”  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நகைச்சுவை நடிகர் தான் கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதாகவும், சினிமாவில் இரண்டு சாதியினர் தங்களது சாதியினருக்கு மட்டும் வாய்ப்பு கொடுப்பதாகவும் இடைப்பட்ட நாங்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் மாரிமுத்து, நான் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து 35 வருடங்கள் ஆகிறது. இந்த அவையில் 80-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். சினிமாவில் வாய்ப்பு தேடிய காலம் முதல் இப்போது வரை யாரும் எனக்கு சாதி பார்த்து வாய்ப்பு கொடுக்கவில்லை. இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் எனக்கு சாதி பார்த்து, வாய்ப்பு கொடுக்கவில்லை. எனது திறமையைப் பார்த்து தான் வாய்ப்பு கொடுத்தார் என கூறினார். 


சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்தான உரையாடல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் சாதிப்பெருமை படமாக எடுத்து வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. 


இது தொடர்பாக, கடந்த 2017ஆம் ஆண்டு, நீட் தேர்வினால் தனது மருத்துவர் கனவை எட்ட முடியவில்லை என மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அஞ்சலி கூட்டத்தைக் கூட்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அப்போது, தமிழ் சினிமாவில் சாதி இருப்பதாக கூறினார். மேலும், உதவி இயக்குநர்களை தேர்வு செய்யப்படுவதிலும் சாதி உள்ளது என கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்த சிலர் ஒப்புக்கொண்ட நிகழ்வும் நடைபெற்றது. 


சினிமா கலைஞர்கள் சிலர் சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது என்றும், சிலர் என்னிடம் யாரும் சாதி பார்ப்பதில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் சமூகத்தின் அங்கமாக உள்ள வாழிடங்கள், கல்வி நிலையங்களில், வழிபாட்டுத்தளங்களில் சாதி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு சாட்சியாக பல நிகழ்வுகள் இன்றும் நடந்து வரும் போது, சமூகத்தின் முக்கிய அங்கமாக உள்ள சினிமாவில் சாதி இல்லை என்பதை யார் ஏற்பார்கள்.