நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார்.
அதேசமயம் “இந்திய ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை நடிகர் மன்சூர் அலிகான் தொடங்கினார். அவர் ஏற்கனவே தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். இதன் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பல்லாவரத்தில் அக்கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளும் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.
அதாவது, “இப்போதைக்கு தேர்தல் தான் எங்கள் நோக்கம். கூட்டணி யார்கூட வேண்டுமானாலும் வைப்போம். எல்லா விதமான தூதும் விட்டுள்ளோம். பல கதவுகள் திறக்க மாட்டேங்குது. நாங்க திறப்போம், உடைப்போம், எங்கள் தாக்குதலை தொடங்குவோம். எளியவர்களுக்கான சமுதாயமாக மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கூட்டணி பற்றி முடிவு பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். நான் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறேன். நாங்கள் ஒரு 5 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம். மற்ற இடங்கள் பரிசீலனையில் இருக்கிறது.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியில் 20 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். இந்தியாவில் எல்லாம் போலி ஜனநாயகமாக இருக்கிறது. ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். தமிழரை பிரதமராக அனுப்புவோம். எல்லா நிலையிலும் தமிழர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சிறிய மாற்றத்தை முன்னெடுத்து செல்ல உள்ளோம்.
எல்லாருமே மதுவுக்கு அடிமையாகி கொண்டு தான் இருக்கிறார்கள். போதைப் பொருட்கள் விஷயத்தில் யாராக இருந்தாலும் சிறையில் தூக்கி போடுங்கள். உலக நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்களை கொண்டு வாருங்கள். சமூகத்தில் குற்றம் நடக்க காரணமே வேலை வாய்ப்பு இல்லாதது தான். அந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
பெரியார், அண்ணா கொள்கையை இவர்கள் கடைபிடிக்கவில்லை. அவர்களின் உண்மையான சித்தாந்தத்தை கடைபிடித்திருந்தால் இவர்கள் எளிமையாக இருந்திருக்க வேண்டும். குடும்பம் ரூ.20 லட்சம் கோடிக்கு அதிபதியாக உள்ளது. அவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாத உலகநாடுகளே இல்லை. நாங்க வெளிப்படையாகவே சொல்லுவோம். யாராக இருந்தாலும் கவலையில்லை” என தெரிவித்தார்.