சினிமாத்துறை ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை அனுமதிக்க முடியாது என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகானிடம், அவர் நடித்திருந்த சரக்கு படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரக்கு படத்தை ரூ.4 கோடி போட்டு எடுத்தேன். ஆளும்கட்சியின் ஆதிக்கம் காரணமாக எனக்கு போதுமாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. தம்பி உதயநிதியை பலமுறை நேரில் போய் பார்த்தேன்.அவர் ஓடிடியில் வெளியிடுவோம், தியேட்டர்கள் கிடைக்கச் செய்வோம் என கூறினார்.
ஆனால் அவர்கள் யாரையுமே திரும்ப தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேமாதிரி ஓடிடியிலும் வெளியிட முடியவில்லை. அந்த நேரம் பார்க்க கேப்டன் விஜயகாந்தின் மறைவு வேறு நடந்தது. ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாம் இருக்கிறார்கள். முன்னமாதிரி எதுவும் இல்ல. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கு. இதை அப்படியே அனுமதிக்க முடியாது. அதை இனிமேல் பார்த்துக்கலாம்” என தெரிவித்தார்.
சர்ச்சைகளை சந்தித்த சரக்கு படம்
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் மன்சூர் அலிகான். இவர் கடந்த 10 ஆண்டுகளாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேசமயம் அவ்வப்போது மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் படங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவரின் நடிப்பில் “சரக்கு” என்னும் படம் கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வெளியானது. ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்திருந்தார்.
சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்த நிலையில் மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஆரம்பம் முதலே பல பிரச்சினைகளை சந்தித்தது.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கு வலுக்கட்டாயமாக மாலை அணிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு மேடையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டாலும், பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார். இதன்பின்னர் டிசம்பர் 26 ஆம் தேதி சரக்கு படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி நடந்தது.
இப்படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் இந்நிகழ்வு முடிந்ததும் மன்சூர் அலிகானிடம் நேரடியாக பிரச்சினை செய்தார். இதற்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். ஆனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது. படத்தை படமாக பார்க்குமாறு படக்குழு அந்த வழக்கறிஞரிடம் பதிலளித்தனர். இப்படி பல தடைகளை தாண்டி வெளியான சரக்கு படம் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.