சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள குருநாதசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். சேலை டிசைனிங் ஒர்க் தொழில் செய்து வரும் இவருக்கு இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் பிரகதீஸ்வரி, பிஎஸ்சி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டில் நிச்சயதார்த்த விழாவிற்காக காரில் அய்யப்பன் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.


அப்போது, இளம்பிள்ளை-ஜலகண்டாபுரம் ரோட்டில் சின்னபணிக்கனூர் கரியபெருமாள் கோயில் அருகே சென்றபோது, முன்னால் மற்றொரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து முகமூடி அணிந்து கொண்டு 5 பேர் கீழே இறங்கி வந்தனர். அவர்கள், அய்யப்பனின் கார் கண்ணாடியை உடைத்து, கத்தி, இரும்பு ராடை காட்டி மிரட்டி உள்ளே இருந்த நிச்சயதார்த்த பெண்ணான பிரகதீஸ்வரியை வெளியே இழுத்தனர். அப்போது அவரது தங்கை தடுக்கவும், அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு மற்றொரு காரில் பிரகதீஸ்வரியை ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட காரில், சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த ஹரி அரவிந்த் என்பவர் இருந்ததை பார்த்துள்ளனர். அவர், பிரகதீஸ்வரியை காதலித்து வந்ததாக அவரது தங்கை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.


இக்கடத்தல் பற்றி ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் அய்யப்பன் புகார் கொடுத்தார். அதில், தனது மகள் பிரகதீஸ்வரியை ஹரி அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் முகமூடி அணிந்து வந்து காரை வழிமறித்து கடத்தி சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தர வேண்டும், என கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கடத்தல் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஹரி அரவிந்த் உள்ளிட்ட 6 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


தொடர் விசாரணையில், கடத்தப்பட்ட பிரகதீஸ்வரியை ஹரி அரவிந்த் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், இதனை அறிந்த பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்க சென்றதும் தெரியவந்தது. நிச்சயத்திற்கு செல்வதை பிரகதீஸ்வரி மூலம் அறிந்து கொண்டு வழியில் காரை வழிமறித்து இக்கடத்தலை ஹரி அரவிந்த் தனது நண்பர்களுடன் அரங்கேற்றியிருப்பதும் தெரிந்தது. இதனால், காதல் ஜோடி மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


இதனிடையே நேற்றிரவு, கடத்தப்பட்ட பிரகதீஸ்வரியை அவரது காதலன் ஹரி அரவிந்த் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், இனி தங்களை தேட வேண்டாம் என அவர்கள் போனில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இத்தகவலை போலீசாரிடம் கூறினர். இருப்பினும் முகமூடி அணிந்து வந்து பெண்ணை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், தொடர்ந்து ஹரி அரவிந்த், அவரது கூட்டாளிகள் 5 பேர் மற்றும் பிரகதீஸ்வரியை ஜலகண்டாபுரம் காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.