தான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்றும், நாளை காவல்துறையில் ஆஜராக உள்ளதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் ஆடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான், கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை த்ரிஷா உட்பட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


அவரை இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை த்ரிஷா விவகாரத்தில் விளக்கம் கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால்  தனக்கு தொண்டையில் பிரச்சினை இருப்பதால் நாளை ஆஜராகிறேன் என கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினார். 


இதுதொடர்பாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், “எனது வழக்கறிஞர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். முதலில் என்னுடைய பெயரில் முதலில் நுங்கம்பாக்கம் போலீஸில் வழக்குப்பதிவு சொன்னார்கள். அங்கே சென்று கேட்டபோது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் தான் வழக்குப்பதிவு செய்ததாக சொன்னார்கள்.  என்னை இன்று ஆஜராக சொல்லி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து கடிதம் கொடுத்தாங்க. ஆனால் எனக்கு தொண்டையில் வலி போன்ற பிரச்சினை இருப்பதால் நாளை ஆஜராகிறேன் என சொல்லி கடிதம் கொடுத்து இருக்கிறேன். சிலர் எனக்கு தொடர்ந்து போன் மேல் போன் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். 


சுவிட்ச் ஆஃப் பண்ணினால் தலைமறைவாகி விட்டேன் என்கிறார்கள். அடப்பாவிகளா பூட்டப்பட்ட என்னுடைய அலுவலகத்தை போட்டோ எடுத்து விட்டு நான் தலைமறைவாகி விட்டதாக சந்தோச செய்தியை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு, எப்படி திசை திருப்புகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலேயும் இப்படித்தான் மத்திய அரசு ஆட்களை வைத்து பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள். நான் என்ன யாரையாவது பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா? அல்லது கொலை செய்து விட்டேனா?. ஏன் இப்படி ஆனந்த புளங்காகிதம் அடைகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.